ADDED : பிப் 20, 2026 04:19 AM

வேலுார்: வேலுாரில் வரும் 23ல் த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் கட்சியினர் செய்து வந்தனர். ஆனால், 'மக்கள் சந்திப்பு' கூட்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட, மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, வேலுார் மாவட்ட த.வெ.க.,வினர் செய்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட த.வெ.க.,வினர் கூறியதாவது: வேலுாரில் நடக்கும் கூட்டம், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக்கானது. பொதுமக்களை சந்திக்க வைக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், போலீஸ் மறுத்துவிட்டது. 4,900 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அதனால், மக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு விட்டது.
கடந்த முறை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடந்தபோது, கூட்டத்திற்கு வந்திருந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி ஒருவர் வெயிலுக்கு பலியானார். அப்படிப்பட்ட சம்பவங்கள் ஏதும் இங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்காக முதல் முறையாக பந்தல் போடுகிறோம்.
நாற்காலிகளும் போடப்பட்டு, கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் உட்கார வைக்கப்படுவர். கூடவே, கூட்டத்துக்கு வருவோருக்கு சிற்றுண்டியும் வழங்கப்படும். அதேபோல, எவ்வித மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலும், அதை உடனடியாக நிறைவேற்ற, வேன்களில் மினி மருத்துவமனை அமைக்கப்படும். மருந்து பொருட்களுடன் மருத்துவர்களும் வேன்களில் தயாராக இருப்பர்.
அதையும் கடந்து, மேல்சிகிச்சை தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல, 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும். 'சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்' என, கட்சித் தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளதால், நிறைய முன்னெச்சரிக்கையோடு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

