கேள்வி எழுப்பிய பெண்ணால் அதிர்ந்தார் அமைச்சர் முத்துசாமி
கேள்வி எழுப்பிய பெண்ணால் அதிர்ந்தார் அமைச்சர் முத்துசாமி
UPDATED : ஜூலை 25, 2025 04:11 PM
ADDED : ஜூலை 25, 2025 02:27 AM

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவங்கி வைப்பதற்காக, அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு வந்தார்.
ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டு மரப்பாலம் ஜீவானந்தம் நகரில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைப்பதற்காக, சென்றார்.
அப்போது அங்கு கோபமாக ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த அமைச்சர் முத்துசாமி, 'என்னம்மா இங்க நிக்கிறீங்க... ஏதும் குற்றம் குறை இருந்தா, அருகில் வந்து சொல்லும்மா' என தன் அருகில் அழைத்தார்.
உடனே அமைச்சர் அருகில் சென்ற அந்தப் பெண், ஒற்றை விரலை நீட்டி கோபமாக கேள்வி எழுப்பினார். 'தேர்தல் நெருங்கற இந்த நேரத்துல மட்டும் இந்தப் பகுதிக்கு ஏன் வர்றீங்க இந்த பகுதியில் ரோடு போட சொல்லி எத்தனை மனு கொடுத்துள்ளேன்.
'ஒண்ணக்கூட கண்டுக்கல. உங்கள பார்க்க முயற்சித்தேன். அதுவும் முடியல. தேர்தல்ல ஓட்டு வாங்கும் எண்ணத்தோட இங்க வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்கீங்க... இது நியாயமா' என கேட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் முத்துசாமி, அதிர்ந்து போய் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமாரும் மற்றவர்களும் பதற்றமடைந்தபடியே, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, கேள்வி எழுப்பிய பெண்ணை மெதுவாக தள்ளியபடியே அப்புறப்படுத்தினர்.