ADDED : செப் 27, 2024 05:11 AM

சென்னை : செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கவும், அக்டோபர் 2 அமாவாசை அன்று, அமைச்சரவையை மாற்றி அமைக்கவும், முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த மின் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நீடிக்க வைக்க முடிவு செய்து, கவர்னருக்கு முதல்வர் கடிதம் அனுப்பினார். துறை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது' என தெரிவித்தார்.
இதை கண்டுகொள்ளாமல், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்' என முதல்வர் அறிவித்தார்; அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை கடந்த பிப்., 13ல் ராஜினாமா செய்தார். அதன் காரணமாக அமைச்சர்கள் எண்ணிக்கை, 33 ஆக குறைந்தது.
சமீப நாட்களாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக தி.மு.க., வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதையொட்டி அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, செந்தில் பாலாஜியும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அமைச்சர் பதவி ஏற்க அவருக்கு எந்த தடையும் இல்லை.
அதனால், அமைச்சரவை மாற்றம் நிச்சயம் என, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அக்., 2 அமாவாசை அன்று இந்த மாற்றங்கள் இருக்கலாம் என, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.