ADDED : ஏப் 07, 2024 12:41 AM

பிரபல நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக, தலைவி படத்தில் நடித்தார். ஜான்சி ராணி கதாபாத்திரத்திலும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். 'தேசிய பற்று கொண்ட நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்; உங்கள் மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் போட்டியிட இப்போதிருந்தே உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓர் ஆண்டுக்கு முன் கங்கனாவிடம் சொல்லி விட்டாராம்.
இப்போது ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், முதல்வர் சுக்விந்தர் சுகுவிற்கு எதிராக சொந்த கட்சியினரே செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆறு எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., ராஜ்யசபா வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போது அவர்கள் பா.ஜ.,வில் இணைந்து விட்டனர்.
ஹிமாச்சல பிரதேச காங்., தலைவர் பிரதிபா சிங், மண்டி தொகுதியின் எம்.பி.,யாக இருந்தவர். இப்போது போட்டியிட மறுத்துவிட்டதுடன், முதல்வருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்த மாநிலத்தில் நான்கு எம்.பி., தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் மூன்று தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற, மண்டி தொகுதியிலிருந்து காங்கிரசின் பிரதிபா சிங் வெற்றி பெற்றார்.
இப்படி காங்கிரஸ் பரிதாப நிலையில் இருக்க, 'பா.ஜ., நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என, சொல்லப்படுகிறது. 'அப்படி ஜெயித்து, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், கங்கனாவிற்கு அமைச்சர் பதவி நிச்சயம்' என்கின்றனர்.

