ADDED : மார் 10, 2024 02:18 AM

மகளிர் தினத்தை ஒட்டி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பங்கேற்கும் மாநாட்டை மதுரையில் நடத்த மகளிர் அணியினர் விரும்பினர்.
மாநாட்டு பணிகளை மேற்கொள்ள, அம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரை தி.மு.க., மகளிர் அணியை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் தமிழரசி, முன்னாள் பெண் எம்.பி., ஹெலன்டேவிட்சன், நாமக்கல் ராணி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
அப்போது அமைச்சர் உதயநிதி படம் இடம் பெறுவது தொடர்பான விவாதத்தில் அமைச்சர், 'டென்ஷன்' அடைந்தார். மகளிர் அணி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
ஒரு கட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகளை தடித்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். மகளிர் அணி நிர்வாகிகளோ, கண்ணீர்மல்க தங்களுக்கு நேர்ந்த விபரத்தை முதல்வர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பின், மதுரையில் மகளிர் அணி மாநாடு நடத்தும் திட்டம் கைவிடப்பட்டு, திண்டுக்கல்லில் நேற்று நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
மகளிருக்கு சம உரிமை, சமத்துவம், சமூக நீதி, மகளிருக்கு இட ஒதுக்கீடு பேசும் தி.மு.க.,வில் மகளிருக்கு உரிய மரியாதை இல்லையே என, பாதிக்கப்பட்ட மகளிர் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -

