ADDED : ஜன 29, 2024 05:27 AM

சென்னை : லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க., விரும்பியது. வன்னியர் இட ஒதுக்கீட்டை, அரசு நடைமுறைப்படுத்தக்கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்.
தற்போது, கூட்டணியில் பா.ம.க.,வுக்கு இடமில்லை என்பது தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு துவக்கியதன் வாயிலாக உறுதியாகி உள்ளது.
துரைமுருகன் வாயிலாக, பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடந்தன. ஆனால், அமைச்சர்கள் வேலு, நேரு ஆகியோர், பா.ம.க.,வை சேர்க்க வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தகவல், துரைமுருகன் வாயிலாக, பா.ம.க., நிர்வாகிகளின் காதுகளை எட்டியுள்ளது. இதனால் கடுப்பான அன்புமணி, 'திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அமைச்சர் வேலு நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரின் இந்தக் கோபத்துக்கு காரணம், தி.மு.க.,வுடனான கூட்டணியை கைகூட விடாமல் செய்ததே என பா.ம.க., வட்டாரங்கள் கூறுகின்றன.