தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி; டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வுகள் ரத்து
தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி; டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வுகள் ரத்து
UPDATED : பிப் 09, 2026 06:36 AM
ADDED : பிப் 09, 2026 03:44 AM

சென்னை: தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக, குரூப் - 2, 2ஏ தேர்வுகள், தமிழகம் முழுதும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் - பதி வாளர் நிலை - 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவியாளர் என, பல்வேறு 'குரூப் - 2, 2ஏ' பணிகளில், 828 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி வெளியிடப்பட்டது.
9,457 பேர் தகுதி
அதற்கான முதல்நிலை தேர்வு, கடந்த ஆண்டு செப்., 28ம் தேதி நடந்தது. தேர்வுக்கு, 5 லட்சத்து 53,634 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 4 லட்சத்து 20,217 பேர் முதல்நிலை தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள், கடந்த டிசம்பர் 22ல் வெளியாகின. அதில், 'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு, 1,126 பேர்; குரூப் - 2ஏ தேர்வுக்கு, 9,457 பேர் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வுகள், தமிழகம் முழுதும், 38 மையங்களில் நேற்று நடப்பதாக இருந்தன. காலையில், 'குரூப் 2ஏ' பொது அறிவு தேர்வும்; மதியத்தில், 'குரூப் 2, 2ஏ' தமிழ் தகுதி தேர்வும் நடப்பதாக இருந்தன.
சென்னையில் மாநில கல்லுாரி, நந்தனம் அரசு கல்லுாரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி ஆகிய மூன்று மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 9:30 மணிக்கு தேர்வுகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்காக தேர்வர்கள், காலை 8:30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வரத் துவங்கினர்.
குவிந்தனர்
இதில், அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி மையத்தில், அனுமதி வழங்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும், ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, பலரின் பெயர் மற்றும் தேர்வு எண்கள், தேர்வு மைய அறிவிப்பு பலகையில் இல்லை. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த போது, தேர்வு மைய முகவரி தவறுதலாக இருப்பது தெரியவந்தது.
அதாவது, நந்தனம் கல்லுாரி தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட, 500க்கும் அதிகமான தேர்வர்களின் ஹால் டிக்கெட்களில், டி.ஜி.வைஷ்ணவ கல்லுாரி என, தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள், தேர்வு மைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அதேபோல, டி.ஜி.வைஷ்ணவ கல்லுாரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில், நந்தனம் அரசு கல்லுாரி என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குளறுபடிகள் காரணமாக கொந்தளித்த தேர்வர்கள், வைஷ்ணவ கல்லுாரி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வந்து, அவர்களுடன் பேச்சு நடத்தினார்.
''தேர்வர்களுக்கு கணினி வழியாகவே ஹால் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தேர்வு மையங்கள் மாறி மாறி குறிப்பிடப்பட்டு உள்ளன. நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வர்கள் அனைவரும் பதற்றமான மனநிலையில் உள்ளீர்கள். அதனால், தமிழகம் முழுதும் தேர்வு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
இதற்கிடையில், கோவை உள்பட பிற மாவட்டங்களில் தேர்வுகள் துவங்கப்பட்டு, வினாத்தாள்கள் வினியோகிக்கப்பட்டன. பின்னர், தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடப்பதால், ஆண்டுக்கணக்கில் சவால்களை கடந்து, இதற்காக தயாராகி வருகிறோம். இதுபோன்ற குளறுபடிகள், எங்கள் நம்பிக்கையை, உறுதியை சீர்குலைத்து விடுகின்றன.
- தேர்வர்கள்
