'ராணுவ வீரர்களின் தியாகம், வீரம் போற்றும் திரைப்படங்கள் அதிகம் வெளியாக வேண்டும்'
'ராணுவ வீரர்களின் தியாகம், வீரம் போற்றும் திரைப்படங்கள் அதிகம் வெளியாக வேண்டும்'
ADDED : நவ 11, 2024 04:25 AM

நாட்டின் பாதுகாப்புக்காக எந்நேரமும் எல்லையில் நின்று போராடும், நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்களை எடுத்து, இளம் தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும். அவர்கள் மழை, வெயில், பனி என எல்லா சூழலையும் பொருட்படுத்தாமல், எல்லை சாமியாக நின்று நம் நாட்டை காக்கின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம், தீவிரவாதிகள் ஊடுருவல், வேறு விதமான தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற இக்கட்டான சூழல்களில், அவர்கள் தான் நாட்டை காக்கின்றனர். ராணுவ வீரர்கள், போர் வந்தால் தம் உயிரை தியாகம் செய்வதில் சமரசம் செய்வதில்லை. அப்படிப்பட்ட வீரர்களின் தியாகம் நிறைந்த உண்மை சம்பவங் களை திரைப்படமாக்கும் நிகழ்வு, சமீப காலமாக அதிகமாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான, அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை பேசியது. அதில், ராணுவ வீரர்களின் தலைமை பண்பு, ஒழுக்கம், தேசப்பற்று போன்றவை விவரிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தற்போதைய இளைஞர்களை ராணுவத்தில் சேர துாண்டும் விதமாக, இதுபோன்ற வீரர்களின் தியாகம் குறித்த படங்கள் அதிகமாக எடுக்கப்பட வேண்டும் என, பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் மதன்குமார் கூறியதாவது: இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் அதிகமாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டுவர். இதுபோன்று வெளிவரும் திரைப்படங்கள், மக் களிடையே நாட்டுப்பற்றை யும் அதிகரிக்கும்.
படத்தை பார்ப்பவர்களுக்கு ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்; ஆர்வத்தை துாண்டும். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும், கணினி அல்லது ஐ.டி., துறைகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர். 'ஊரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், எல்.ஒ.சி., கார்கில், 1971 இந்தியா - பாக்., போர்' உள்ளிட்ட படங்கள், நிஜ வரலாற்று நிகழ்வுகளை கூறுபவை. இதை பார்க்கும் இளைஞர்களுக்கு, நாமும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
ஹிந்தி மொழி தெரிந்தால் தான், ராணுவத்தில் சேர முடியும் என்ற நிலையெல்லாம் தற்போது கிடையாது. எனவே, வீரர்களின் உயிர் தியாகத்தில் கிடைக்கும் போர் வெற்றி, ராணுவ அதிகாரிகள் நிகழ்த்தும் திடீர் தாக்குதல்கள், அதனால் நிகழும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட வற்றை, உண்மையாக விளக்க வேண்டும். இதனால், இளைஞர்கள் முப்படைகளில் சேராவிட்டாலும், நாட்டுப்பற்றுடனும், படைகளின் மீது மரியாதையுடனும் வளர்வர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -