நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் சென்னை மக்கள் கடும் அவதி
நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் சென்னை மக்கள் கடும் அவதி
UPDATED : ஜன 21, 2026 07:58 AM
ADDED : ஜன 21, 2026 07:55 AM

நமது நிருபர்
நலன் காக்கும் ஸ்டாலின் முகாம், வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக, கொசு ஒழிப்பு பணியாளர்கள் மாற்றப்பட்டதால், சென்னை முழுதும் மூன்று மாதமாக கொசு மருந்து அடிக்கும் பணி முடங்கிவிட்டது. இதனால் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து, அதன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
சென்னையில் சமீப காலமாக, தட்ப வெப்ப நிலை மாற்றம் மற்றும் கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவ மனைகள் மட்டுமின்றி, சிறு கிளினிக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கு கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதே முக்கிய காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தடுப்பு நடவடிக்கை
காலை, மாலை வேளைகளில் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் நிற்க முடியாத அளவில் முகம், கை, கால்களில் கொசுக்கள் மொய்த்து கடிக்கின்றன. தெருக்களில் மட்டுமல்ல வீடுகள், அலுவலகங்களில்கூட நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு கொசுக்கள் எல்லா இடங்களிலும் பரவி, எல்லாரையும் பாடாய் படு த்துகின்றன. எப்போதும் இல்லாத அளவில் கொசுக்க ளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே, நவம்பர் முதல் ஜனவரி வரை மூன்று மாதங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகம் இருக்கும். இந்த மாதங்களில், மாநகராட்சி பூச்சியல் வல்லுனர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். அரசும், மாநகராட்சியும் கொசு ஒழிப்பு பணியை முடுக்கி விடும். ஆனால், இந்த முறை கொசு ஒழிப்பு பணி ஏதும் முடுக்கிவிடப்படவில்லை.
'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்' உள்ளிட்ட மாற்று பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.கொசு ஒழிப்பு பணியாளர்களும், இந்த சிறப்பு முகாம், பணி களுக்கு மாற்றப்பட்டனர்.
இதனால், கொசு ஒழிப்பு பணிக்கு ஆள் இல்லாத நிலையில், அதன் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது என, மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.
மாநகராட்சி 'பாவ்லா'
எப்போதாவது புகை பரப்பும் வாகனங்கள் கடமைக்காக அனுப்பப்படுகின்றன. அதன் ஓட்டுநர்கள் அசுர வேகத்தில் வீதிகளில் கடந்து, 'பாவ்லா' காட்டி செல்கின்றனர். இதனால், கொசு தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
என்ன பண்றது?
இது குறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்துவது சவாலானது. அதேநேரம், அவை முட்டையாக இருக்கும்போதே கண்டறிந்து அழிப்பது எளிது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகக்கூடிய இடங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பர். அதேபோல, மழைநீர் வடிகால், திறந்தவெளி இடங்கள் உள்ளிட்டவற்றையும் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு அரசின் வெவ்வேறு பணிகளுக்கு அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்பை காட்டிலும், வாக்காளர் சிறப்பு திருத்த பணி, நலன்காக்கும் ஸ்டாலின் திட்டம்தான் முக்கியம் என, அழுத்தம் கொடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். சில இடங்களில் கொசு ஒழிப்பு பணி, பெயரளவில் தான் நடந்து வருகிறது.
வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு கொசு மருந்து அடிக்கப்படும்போது வாகனத்தின் வேகம், 5 கி.மீ., ஆக இருக்க வேண்டும். ஆனால், 10 கி.மீ., வேகத்தில் வாகனம் செல்லும்போது மருந்து அடித்தாலும், அப்பகுதியில் இருக்கும் கொசுக்களுக்கு எதுவும் ஆகாது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, தீவிர கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டால் மட்டுமே, கொசுக்களை கட்டுப்படுத்த முடியும். எங்களிடம் பணியாளர்கள் இல்லாமல், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பு கவனம் தேவை
கொசு தொல்லை அதிகரிப்பால், காய்ச்சல் ஏற்பட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். சிகிச்சை பெற்றாலும் எளிதாக குணமாவதில்லை. மாநகராட்சி கொசு மருந்து அடிக்காததே இதற்கு காரணம். நிலைமை இன்னும் மோசமாவதற்குள் மாநகராட்சி கமிஷனர் கொசு ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். - எஸ்.குமாரராஜா, தலைவர், அன்னை இந்திரா நகர் நலவாழ்வு சங்கம், வேளச்சேரி.

