'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த எம்.பி.,க்கள் கோரிக்கை
'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த எம்.பி.,க்கள் கோரிக்கை
UPDATED : நவ 15, 2024 03:57 AM
ADDED : நவ 15, 2024 01:50 AM

சமூக ரீதியாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இப்பிரிவில் உள்ள வசதியானவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், 1971ல், சதானந்தன் ஆணையம் அமைக்கப்பட்டு, ஆராயப்பட்டது.
அப்போது, பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களை ஓ.பி.சி., பிரிவிலேயே மேல்நிலை அடைந்துவிட்டவர்களாக கருதி, அவர்களை, 'கிரீமிலேயர்' என வகைப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டியதில்லை என, அந்த ஆணையம் பரிந்துரை செய்தது. இதன்படி, தற்போது ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானமுள்ள ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு நிறுத்தப்பட்டது.
ஆனாலும், இந்த இடஒதுக்கீடு வருமான வரம்பு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான், பா.ஜ., மூத்த எம்.பி., கணேஷ் சிங் தலைமையிலான, ஓ.பி.சி., பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் இரண்டு முக்கியமான விவகாரங்களை பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் என அனைவருமே எழுப்பினர். ஒன்று, கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான வரம்பை, 8 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது.
இரண்டாவது, இந்த வருமான வரம்பை கணக்கிடுவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பது. இவ்வாறு கணக்கிடுவதால், பல மாணவர்கள் கிரீமி லேயர் வருமான உச்ச வரம்பை தாண்டி விட்டதாக கருதப்பட்டு, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
எனவே, இந்த கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு மற்றும் அதை கணக்கிடுவதில் உள்ள குழப்பங்கள் ஆகியவை குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டுமென எம்.பி.,க்கள், வலியுறுத்தியுள்ளனர்.
- நமது டில்லி நிருபர் -