ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்; 'ஆதார்' இருந்தும் கண்டுபிடிக்காத வாரியம்
ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்; 'ஆதார்' இருந்தும் கண்டுபிடிக்காத வாரியம்
ADDED : பிப் 07, 2025 06:53 AM

சென்னை: ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்ற விபரத்தை கண்டறிய, மின் இணைப்பு எண்ணுடன், நுகர்வோரின், 'ஆதார்' எண் இணைக்கும் பணி முடிவடைந்து இரு ஆண்டுகளாகியும், அந்த விபரம் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், முறைகேடான மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. சிலர் இலவச மின்சார சலுகை பெறவும், அதிக மின் கட்டணம் வருவதை தவிர்க்கவும், ஒரே வீட்டுக்கு முறைகேடாக கூடுதல் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் பலர், இலவச மின்சாரத்திற்கு வாடகைதாரர்களிடம் யூனிட்டுக்கு, 5 - 10 ரூபாய் வசூலிக்கின்றனர். எனவே, இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் வீடுகள் உட்பட, 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்களுடன், அவர்களின், 'ஆதார்' எண்களை இணைக்கும் பணியை, மின் வாரியம், 2022 நவம்பரில் துவக்கியது. பணி, 2023 மார்ச்சில் முடிவடைந்தது.
இதுவரை, ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து, மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இலவச மின்சாரம் ரத்தாகும் என கருதி, பலர் ஆதார் இணைக்க வரவில்லை. இதையடுத்து, 'ஆதார் இணைத்த பின், ஒருவர் பெயரில் விதிகளுக்கு உட்பட்டு, எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும், அனைத்துக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்; ரத்து செய்யப்படாது' என, மின் வாரியம் அறிவித்தது. பின், பலரும் ஆதார் எண்களை இணைத்தனர்.
அப்படி இருந்தும், இரு ஆண்டுகளாகியும், ஒரே நபர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன; அவை விதிகளுக்கு உட்பட்டு வாங்கப்பட்டுள்ளனவா என்ற விபரங்களை, மின் வாரியம் வெளியிடாமல் உள்ளது. இதற்கு, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமே காரணம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.