sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஜாதி சாயம் பூசப்பட்ட பின் சாயம் வெளுத்த கொலை!

/

ஜாதி சாயம் பூசப்பட்ட பின் சாயம் வெளுத்த கொலை!

ஜாதி சாயம் பூசப்பட்ட பின் சாயம் வெளுத்த கொலை!

ஜாதி சாயம் பூசப்பட்ட பின் சாயம் வெளுத்த கொலை!

5


ADDED : டிச 08, 2024 03:33 AM

Google News

ADDED : டிச 08, 2024 03:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்வாவிற்கு மட்டுமல்ல; அரிவாளுக்கும் பேர் பெற்ற நெல்லையில், ஜாதிக் கலவரம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த, 1995-ல், நடந்த சம்பவங்களைப் பார்ப்போம்...

அது, 02.12.1995. நெல்லை மாவட்ட எல்லையில், கங்கைகொண்டான் என்ற காவல் நிலைய எல்லைக்குள், இரு வேறு வகுப்பினரைச் சேர்ந்தவர்களுக்குள், மாறி மாறி பழிதீர்க்கும் நோக்கில், ஒரே நாளில், 7 ஜாதிக் கொலைகள் அரங்கேறின.

அடுத்த நாள், 03.12.1995 அன்று மாலை, தச்சநல்லுார் பகுதியில், மாலைநேர ரோந்து பணியில் இருந்தேன். அப்போது ஒயர்லெஸ் மூலம் நெல்லை கட்டுப்பாட்டு அறையிலிருந்து, தச்சநல்லுார் காவல் சரகத்திற்குட்பட்ட ராமையன்பட்டி அருகிலுள்ள, சத்திரம் புதுக்குளம் கிராமம் அருகே, தகராறு நடக்கிறது என தகவல் வந்தது.

நான் அவ்விடத்திற்கு விரைந்தேன். அங்கு சாலையில், 45 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணும், 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் எவ்வித அசைவும் இன்றிக் கிடந்தனர்.

அவர்கள் கிடந்த நிலையும், ரத்த வெள்ளத்தையும் பார்க்கையில், இருவரும் இறந்து விட்டனர் என்றே தோன்றியது. இருட்டான பகுதி, வேறு நபர்கள் யாரும் அங்கில்லை.

லேசான அசைவு

ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இருவர் அருகில் சென்று, டார்ச் லைட் அடித்து பார்த்தபோது, அந்த ஆண் எவ்வித அசைவுமின்றி இறந்து விட்டது தெரிந்தது. ஆனால், அந்த பெண்ணின் வயிற்றுப் பகுதியில், மூச்சு இழுத்து விடுவதற்கான லேசான அசைவு தெரிந்தது.

உடனடியாக என் ஜீப்பில் ஏற்றி, அந்த பெண்ணை நெல்லை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, எமர்ஜென்சி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

விசாரணையில், அந்த இறந்த நபர், சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த செல்லையா என்றும், அந்த பெண்ணின் பெயர் பார்வதி என்றும், இருவரும் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை தேவர் பிரிவினரைச் சேர்ந்த நபர்கள் ஜாதி விரோதம் காரணமாக தாக்கி இருக்கின்றனர் என்றும் அவர்களது உறவினர்கள் புகார் தந்தனர்.

போலீசாரும், ஜாதி காரணத்தால் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டுமென, முதலில் எண்ண வேண்டியிருந்தது.

ஆனால், இரண்டு நாள் கழித்து, மருத்துவமனையில் மயக்கத்தில் இருந்த பார்வதியின் வாக்குமூலம் வேறுவிதமாக இருந்தது. குடும்பப் பகை காரணமாக அதே தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்த அவர்களது உறவினர்களான குண்டுமுருகன் மற்றும் புனிதராஜ் பாண்டியன் ஆகிய இரு நபர்களால் தான், தாங்கள் தாக்கப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிய வந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டு, கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கணக்கு தப்பானது

கொலைகாரர்கள் இருவரும், கும்மிருட்டில் யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட்டு, அக்கொலையையும் ஜாதிக்கொலைகள் என சாயம்பூசி, அந்தக் கணக்கில் சேர்த்து, தாங்கள் தப்பித்து விடலாம் என்று கணக்கு போட்டனர். பார்வதியின் வாக்குமூலம் அவர்களது கணக்கை தப்பாக்கி, அவர்களின் குரூர எண்ணத்தையும் சிதறடித்து விட்டது.

சம்பவம் நடந்த அன்றிரவு ரத்த வெள்ளத்தில் அசைவின்றிக் கிடந்த பார்வதியை, மிக அருகில் சென்று பார்த்ததால்தான் அவரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

சற்று தாமதித்து இருந்தாலும், அவரது இடது கை துண்டிக்கப்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, அவரை எமனின் பிடியில் இருந்து மீட்க முடியாமல் போயிருக்கலாம்.

இறந்தபோன செல்லைய்யாவின் உறவினர்கள், மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து, இந்த கொலையையும் ஜாதி மோதல் கணக்கில் கொண்டுவந்து, அரசு கொடுக்கும் கருணைத் தொகை, தலா 50,000 ரூபாய் பெறும் நோக்கில் முயற்சி செய்து, அதை மாவட்ட ஆட்சியரும் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கருணைத் தொகையை கொடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.

ஆனால் புலன் விசாரணையில், இது ஜாதிமோதல் காரணமாக நடந்த கொலை அல்ல; குடும்பப் பகை காரணமாக நடந்த கொலை என்பது தெரிய வந்ததால், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி, இறந்துபோன செல்லையாவின் குடும்பத்தினருக்கு கொடுக்கவிருந்த கருணைத் தொகை நிறுத்தப்பட்டது.

பார்வதியைப் பார்த்த நொடி முதல், அவரை மருத்துவமனையில் சேர்த்து அவசர சிகிச்சை கொடுத்த நேரம் வரையிலான நேரம், வழக்கின், 'கோல்டன் அவர்' என்று சொல்லலாம்!

போலீசார், தங்கள் விசாரணையின் ஒவ்வொரு நொடியையும் மிகச் சரியாக, துல்லியமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு, இதை உதாரணமாகக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: rc.chinnaraj@gmail.com

காவல்துறை துணை ஆணையர் - பணி நிறைவு

ஆர்.சின்னராஜ்






      Dinamalar
      Follow us