எனது திட்டங்களை புதைக்க முடியாது: பழனிசாமி பேச்சுக்கு முதல்வர் பதில்
எனது திட்டங்களை புதைக்க முடியாது: பழனிசாமி பேச்சுக்கு முதல்வர் பதில்
ADDED : ஏப் 10, 2026 04:37 AM

- நமது நிருபர் -
''ஸ்டாலினுக்கும் மரணம் வரும்; மண்ணில் புதைப்பர். ஆனால், ஸ்டாலின் வகுத்து தந்த திட்டங்களை மண்ணில் புதைக்க, ஒருவராலும் முடியாது'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளின், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மறைமலைநகரில் நேற்று பிரசார கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவதுாறு மட்டுமே பேசுகிறார். எனது மரணத்தை விரும்பி பேசுகிறார். உலகத்தில் மரணத்தை சந்திக்காத, எந்த மனிதரும் இல்லை. யாராக இருந்தாலும் மரணம் வந்து தீரும். ஸ்டாலினுக்கும் மரணம் வரும்; மண்ணில் புதைப்பர். ஆனால், ஸ்டாலின் வகுத்து தந்த திட்டங்களை, மண்ணில் புதைக்க ஒருவராலும் முடியாது. இந்த திட்டங்கள் இருக்கும் வரை, ஸ்டாலின்தான் தமிழகத்தை ஆள்வான்.
கொங்கு மண்டலத்தில், 1971ல் நடந்த மாணவர் அணி மாநாட்டில், 'மொழிப்போருக்காக நான் இறந்தால், எனது தந்தை கருணாநிதி கவலைப்படமாட்டார்' என, பேசி இருக்கிறேன். இதெல்லாம், அரசியல் அழுக்காக இருக்கக்கூடிய பழனிசாமிக்கு தெரியாது. இவ்வளவும் பேசிவிட்டு, இன்று காலை, நான் அப்படி பேசவில்லை. கொரோனா காலத்தில், ஸ்டாலின காணாமல் போனார் என்று சொன்னதாகக் கூறியுள்ளார். வாழ்க்கை முழுக்க களத்தில் இருப்பவன்தான் ஸ்டாலின். பா.ஜ., நீண்டகால திட்டம் எதையும் போடாது. குறுகிய கால திட்டத்தை போட்டு அதை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டவர்தான் பழனிசாமி.
எம்.ஜி.ஆர்., தலைமையில் உருவாகி, தற்போது பழனிசாமியிடம் சிக்கியுள்ள அண்ணாதுரை மற்றும் திராவிடம் என்ற பெயரை, அ.தி.மு.க.,வில் இருந்து எடுத்து விடுங்கள். அதற்கு பதிலாக, பீயூஷ் கோயல், அமித் ஷா, பட்னாவிஸ், என எந்த பெயரையாவது சேர்த்துக் கொள்ளுங்கள். தேர்தலில், பாசிச பா.ஜ.,வும், அடிமை அ.தி.மு.க.,வும், வேரோடு வீழப்போவது உறுதி. இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
