முதல்வர் ஒமர் - எம்.பி.,க்கள் இடையே மோதல் காஷ்மீரில் அல்லல்படும் தேசிய மாநாட்டு கட்சி
முதல்வர் ஒமர் - எம்.பி.,க்கள் இடையே மோதல் காஷ்மீரில் அல்லல்படும் தேசிய மாநாட்டு கட்சி
ADDED : அக் 30, 2025 11:38 PM

ஜம்மு - காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியில், உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. புத்காம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு எதிராக எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2024 செப்டம்பரில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து, அவரது மகன் ஒமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார்.
விமர்சனம் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்து ஓராண்டாகி உள்ள நிலையில், சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஒமர் அப்துல்லா நிறைவேற்றவில்லை என, சொந்த கட்சி எம்.பி.,க்களே குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சியின் மத்திய காஷ்மீர் தொகுதி எம்.பி.,யான ஆகா சையத் ருஹுல்லா மெஹ்தி, முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு எதிராக பேசி வருகிறார். அரசின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அவர் விமர்சித்து வருகிறார்.
அவரை தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சியின் தெற்கு காஷ்மீர் தொகுதி எம்.பி.,யான மியான் அல்தாப் அகமதுவும், ஒமர் அப்துல்லாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளார். 'ஊடகங்களிடம் பேசுவதற்கு முன் ஒமர் அப்துல்லா கவனத்துடன் பேச வேண்டும்' என, அவர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம், ஆகா சையத் ருஹுல்லா மெஹ்தி  எம்.பி., குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
நெருக்கடி கோபமடைந்த அவர், 'ஆகா சையத் ருஹுல்லாவை பற்றி யாரும் பேச வேண்டாம். அவருக்கும், மியான் அல்தாப் அகமதுவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்றார்.
இதற்கு பதிலளித்த ஆகா சையத் ருஹுல்லா, “இந்த பிரச்னை தனிப்பட்ட பகையை விட மிகப்பெரியது. ஜம்மு - காஷ்மீர் தற்போது நெருக் கடியை எதிர்கொள்கிறது.
''சட்டசபை தேர்தலின் போது அ ளித்த சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்போம், ஒரு லட்சம் பேருக்கு வேலை, இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை முதல் வர் ஒமர் அப்துல்லா இதுவரை நிறைவேற்றவில்லை.
போராட்டம் “ஏறத்தாழ, 20,000 பேருக்கு வேலை வழங்கியதாக அரசு கூறுகிறது. அவர்களின் முகவரியை தர முடியுமா? எந்தவொரு விசாரணையும் இல்லாமல் காஷ்மீர் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
''முதல்வர் என்ற பதவியில் ஒமர் அப்துல்லா பெயளரவுக்கு இருக்கிறார்,” என்றார்.
முதல் வர் ஒமர் அப்துல்லாவை கண்டித்தும், ஆகா சையத் ருஹுல்லா எம்.பி.,க்கு ஆதரவாகவும் காஷ்மீரின் சோனாவாரி உட்பட பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதில் திரளான மக்கள் பங்கேற்று, முதல்வருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
புத்காம் தொகுதியில் நவ., 11ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் தேசிய மாநாட்டு கட்சியில், முதல்வர் ஒமர் அப்துல்லா - எம்.பி.,க்கள் ஆகா சையத் ருஹுல்லா, மியான் அல்தாப் அகமது இடையே மோதல் வெடித்துள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -:

