தேசியம், திராவிடம் அல்லது தமிழகம்: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!
தேசியம், திராவிடம் அல்லது தமிழகம்: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!
ADDED : ஜன 09, 2026 05:16 AM

திண்டிவனம்: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ம.க., நான் துவக்கிய கட்சி; வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் செய்த சத்தியத்தை மீறி, அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சராக்கினேன். அவர் எனக்கே வேட்டு வைப்பார் என அப்போது எனக்கு தெரியாது.
டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பா.ம.க.,வில் அன்புமணி இல்லை. கட்சி நிறுவனரான நானே, தலைவர் பதவியிலும் இருக்கிறேன். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு, மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். அன்புமணியுடன் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. அ.தி.மு.க.,வுடன் அன்புமணி கூட்டணி பேச்சு நடத்தியது நாடகம்.
அன்புமணியுடன் கூட்டணி அமைப்பது செல்லாது. அன்புமணி இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவோமா என்பது குறித்து, மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து இரண்டு நாளில் அறிவிப்போம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கைகோர்க்கலாம். அது தேசியம், திராவிடம், தமிழகமாகவும் இருக்கலாம். கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்னுடன் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

