நட்டா பதவி நீட்டிப்பு: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு
நட்டா பதவி நீட்டிப்பு: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு
UPDATED : பிப் 15, 2024 06:29 AM
ADDED : பிப் 15, 2024 01:15 AM

பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, இதை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள, பா.ஜ.,வின் தேசிய தலைவராக, 2020ம் ஆண்டு நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ., விதிகளின்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக் காலம் முடிந்த நிலையில், 2024 ஜூன் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பா.ஜ., உட்கட்சி தேர்தலை முறைப்படி நடத்தாமல், தேசிய தலைவராக நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அவர், இது தொடர்பாக, 2023 நவ., 13ம் தேதி, தலைமை தேர்தல்கமிஷனுக்கு கடிதம்எழுதியிருப்பதாகவும்கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, கடந்த 6ல் நட்டாவுக்கு, சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:
பா.ஜ., தேசிய தலைவரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது, கட்சியின் அரசியலமைப்பு விதிகளையும், அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும். இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனுக்கு, நான் கடிதம் எழுதி உள்ளேன். அதை இத்துடன் இணைத்துள்ளேன்.
இந்த கடிதம் எழுதப்பட்ட நாளில் இருந்து, ஒரு மாதத்துக்கு பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இந்த விவகாரம் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ள நிலையில், தேவைப்பட்டால் டில்லி உயர்நீதிமன்றத்தை நாடுவேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-- நமது சிறப்பு நிருபர் -

