மாநாட்டு அனுமதியில் அலட்சியம்; இனியாவது பாடம் கற்க வேண்டும்
மாநாட்டு அனுமதியில் அலட்சியம்; இனியாவது பாடம் கற்க வேண்டும்
ADDED : அக் 28, 2024 11:11 PM

தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிக்காத வகையில், அரசியல் கட்சியினரின் மாநாடு, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதிப்பில் காவல்துறை, அரசு நிர்வாகம் இனியாவது பாடம் கற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் த.வெ.க., மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த மாநாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். தென், வட மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரமும், ரயில் பாதையின் இடையே உள்ள 100 ஏக்கர் தனியார் இடத்தில் மாநாடு நடந்தது.
சுற்று வட்டாரங்களில் வாகனங்கள் நிறுத்த 150 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டது. 40 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் மாற்று சாலையில் திருப்பிவிட்டபோதும், ஒரு நாள் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த மாநாட்டிற்கு 4 முதல் 5 லட்சம் பேர் வருவார்கள் என முன் கூட்டியே கணித்த போதிலும், அரசு தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் சரியான முடிவெடுக்காமல் விட்டதால், இந்த நெருக்கடியும், அதனால் பொது மக்களும் தவிப்புக்குள்ளாகினர்.
இனியும் இது போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, திண்டிவனம்-விழுப்புரம் இடையே நெடுஞ்சாலை ஒட்டிய பகுதிகளை பிரமாண்ட அரசியல் மாநாட்டுக்கு அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க., பிரசார கூட்டம் இதே இடத்தில் தான் நடந்தது. 40 ஆயிரம் பேர் வரை திரண்டனர். 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சிறிய கூட்டத்திற்கே போக்குவரத்து பாதித்ததை உணர்ந்தபோதிலும், அரசு தரப்பிலும், காவல் துறை தரப்பிலும், உஷாராகாமல், 3 லட்சம் பேர் வரை திரண்ட கூட்டத்திற்கு அனுமதியளித்தது சரியான முடிவல்ல.
அக்டோபர் மாத இறுதியில் கன மழை பெய்யும், த.வெ.க., மாநாட்டுக்கு கூட்டம் சேர வாய்ப்பில்லை என்ற யூகத்தில், ஆரம்பத்தில் அனுமதி வழங்கி விட்டனர். ஆனால் எதிர்பார்த்ததை விட கூட்டம் திரண்டதால் நாள் முழுதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாநாடு நடத்துவோர் புதியவர்கள் என்றாலும், அரசு தரப்பில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
அரசு தரப்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும் இனியும் பாடம் கற்காமல், திண்டிவனம் முதல் விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதிகளையும் தவிர்க்க வேண்டும். திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை போன்று, வெளிவட்ட பைபாஸ் சாலைகள் இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, இதுபோன்ற மாநாடுகளுக்கு அனுமதிக்கலாம்.

