நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை: இந்திய வரலாற்றில் அதிக விலை நிர்ணயம்
நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை: இந்திய வரலாற்றில் அதிக விலை நிர்ணயம்
ADDED : செப் 05, 2025 01:05 AM

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, டில்லியில் வசித்த பங்களா, 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வீடு என்ற பெருமையை இது பெறுகிறது.
இறுதி மூச்சு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு. முன்னதாக, 1946ல் அமைந்த இடைக்கால அரசுக்கு தலைமை தாங்கிய நேரு, டில்லி நகரின் யார்க் சாலையில், தற்போது மோதிலால் நேரு மார்க் என அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் 17ம் எண் இல்லத்தில் அதிகாரப்பூர்வமாக குடியேறினார்.
பின், 1948ல் தீன்மூர்த்தி பவன் இல்லத்தில் குடியேறிய அவர், தன் இறுதிமூச்சு வரை அங்கேயே வசித்தார்.
இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றதும் நேரு வசித்த கட்டடம், லுட்டியன்ஸ் பங்களா மண்டலத்தில் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் சர் எ ட்வின் லுட்டியன்ஸ், 1912 - 30க்கு இடையே வடிவமைத்த இந்த மண்டலம், நாட்டின் மிக பிரத்யேகமான மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு பகுதிகளில் ஒன்று.
மொத்தம், 28 சதுர கி.மீ., பரப்பளவு உடைய லுட்டியன்ஸ் பங்களா மண்டலத்தில், அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் நாட்டின் சில பணக்கார தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர்.
மொத்தம், 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் உள்ள நேரு வசித்த இந்த இல்லம், தற்போது ராஜஸ்தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணி வசம் உள்ளது.
இதன் மதிப்பு 1,400 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்வதற்காக கடந்தாண்டு முதல் பேச்சு நடந்து வந்தது. இறுதியில், 1,100 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டுள்ளது.
இது, நாட்டின் மிக உயர்ந்த மதிப்புள்ள குடியிருப்பு சொத்து ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இல்லத்தை வாங்குபவர் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை.
பொது அறிவிப்பு இருப்பினும், முன்னணி குளிர்பான தொழிற்சாலையை நடத்தும் தொழிலதிபர் ஒருவர் நேருவின் பங்களாவை வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வீட்டை வாங்க உள்ளவர் சார்பில், முன்னணி சட்ட நிறுவனம் ஒன்று பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், 'எங்கள் வாடிக்கையாளர், டில்லி மோதிலால் நேரு மார்க்கில் உள்ள எண் 5, 14, 17 ஆகிய குடியிருப்பு சொத்துக்களை வாங்க விரும்புகிறார்.
'இந்த சொத்துக்கள் மீது உரிமை கோருபவர்கள் யாரேனும் இருந்தால், அடுத்த ஏழு நாட்களுக்குள் முன்வந்து அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
இல்லையெனில், உரிமைகோரல் எதுவும் இல்லை என கருதப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை, வெறும் வணிக ஒப்பந்தமாக பார்க்கப்படவில்லை. நாட்டின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கட்டடத்தில் தான் சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், பெற்ற பின்பும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
டில்லியின் மத்திய பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த பங்களா, அதன் இருப்பிடத்தாலும், வரலாற்றாலும் மிகவும் மதிப்புமிக்கதாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச்சில், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்துடன் தொடர்புடைய லட்சுமி நிவாஸ் பங்களா, 276 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அடுத்தபடியாக, அதிக தொகைக்கு விற்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக நேரு வசித்த பங்களா கருதப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -