மேலிட உத்தரவை மதிக்காத நெல்லை தி.மு.க., கவுன்சிலர்கள்: கட்சிக்கு நெருக்கடி தந்த போட்டி வேட்பாளர்
மேலிட உத்தரவை மதிக்காத நெல்லை தி.மு.க., கவுன்சிலர்கள்: கட்சிக்கு நெருக்கடி தந்த போட்டி வேட்பாளர்
UPDATED : ஆக 06, 2024 10:32 AM
ADDED : ஆக 06, 2024 04:03 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் தேர்தலில், கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் ஓட்டளித்து, தலைமைக்கு 'ஷாக்' கொடுத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் நான்கு பேர் அ.தி.மு.க., மற்றவர்கள் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர். மேயராக இருந்த சரவணனுக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியதால், அவர் ராஜினாமா செய்தார்.
புதிய மேயராக 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமகிருஷ்ணனை தேர்வு செய்து அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு அறிவித்தனர்.
முன்னதாக சரவணன் மேயராக இருந்த போது, அவருக்கு எதிராக போர்க் கொடி துாக்கிய பவுல்ராஜ் உட்பட மூன்று கவுன்சிலர்கள் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் தவறுக்கு வருந்தி தலைமைக்கு கடிதம் தந்ததால், அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். பவுல்ராஜ் மன்னிப்பு கடிதம் கொடுக்காததால், நீக்கப்பட்ட நிலையிலேயே தொடருகிறார்.
இந்நிலையில் நேற்று, நெல்லை மாநகராட்சி வளாகத்தில் புதிய மேயர் தேர்தல் நடந்தது. தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். போட்டி வேட்பாளராக பவுல்ராஜ் மனு தாக்கல் செய்தார். இருவரது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதியம் தேர்தல் நடந்தது. 55 கவுன்சிலர்களில் அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெகநாதன் வரவில்லை. மீதமுள்ள 54ல் ஒரு ஓட்டு யார் பெயருக்கும் எதிராக 'டிக்' செய்யப்படாததால் செல்லாத ஓட்டானது.
மீதமுள்ள 53 ஒட்டுகளில் ராமகிருஷ்ணன் 30 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கூட்ட அரங்கில் எம்.எல்.ஏ., அப்துல் வகாப், துணை மேயர் ராஜு மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் முன்னிலையில் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா வெற்றி பெற்றதற்கான கடிதத்தை தந்தார்.
தலைமைக்கு எதிராக
மேயர் பதவியிலிருந்து சரவணனை மாற்றுவதற்காக பல மாதங்கள் கவுன்சிலர்கள், திருச்சிக்கும், சென்னைக்கும் நடையாய் நடந்தனர். இருப்பினும், நேற்று கவுன்சிலர்கள் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கவுன்சிலர்களிடம் கருத்து கேட்கவில்லை. தலைமை அறிவித்ததாக கூறி, ராமகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தனர்.
அதில் ஏற்பட்ட அதிருப்தியால் 20க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள், எதிர் வேட்பாளர் பவுல்ராஜுவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.
சவாலான சூழல்
திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடக்கவில்லை. சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்த பணிகளும் முறையாக செய்யப்படவில்லை.
கட்சி முடிவுக்கு எதிராக துணிச்சலாக 20 பேர் (மூன்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள்) ஓட்டளித்துள்ளதால், சரவணனுக்கு இருந்தது போன்றே புதிய மேயர் நிலையும் உள்ளது. சவாலான இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம், தி.மு.க., வட்டாரங்களில் எழுந்துள்ளது.