UPDATED : மார் 04, 2026 06:33 AM
ADDED : மார் 04, 2026 04:02 AM

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஜாதி வெறியால் இரண்டு பேரை வெட்டிக் கொன்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில், மூன்று டூ - வீலர்களில் அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ஒன்பது பேர் கும்பல், பெரும்பத்து, இந்திரா காலனி டீக்கடை முன் இருந்த பொதுமக்களை சரமாரியாக வெட்டினர். இதில், ஜான் மார்க், 45, என்ற மாற்றுத்திறனாளி மற்றும் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மேலும் சிலரை, அரிவாளால் வெட்டிய கும்பல், களக்காடு செல்லும் வழியில், கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு முன்னதாக உள்ள வடக்கு புளியங்குளம் கிராமத்திலும் இதேபோல வெறியாட்டம் நடத்தினர். செல்லும் வழியில், சரமாரியாக பெட்ரோல் குண்டுகளையும் வீசி சென்றவர்கள், எதிரே வந்த ஒரு நபரின் பைக்கையும் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் இரவு முழுதும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., பிரசன்ன குமார் தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டனர்.
காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, வீராங்குளம் கணேசன், புளியங்குளம் சசிகுமார் ஆகியோர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், நெல்சன் உடல்நிலை மோசமாக உள்ளது. இறந்த ஜான், தலித் சமூகத்தை சேர்ந்தவர். இன்னொருவர், உள்ளூர் ஜாதிகளுக்கு சம்பந்தமில்லாத ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி.
அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பெரும்பத்து கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணி முதல் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றதில், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிற்பகல், 2:00 மணி வரையிலும் தொடர்ந்த போராட்டம், குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என, போலீசார் உறுதி அளித்த பின் கைவிடப்பட்டது.
இந்த கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட, நாங்குநேரி, தென்னிமலையை சேர்ந்த கண்ணன், 21, சுபாஷ், 19, கல்யாணி, 19, அந்தோணி மிக்கேல், 18, நம்பி நகர் இசக்கிராஜா, வள்ளியூர் உச்சிமாகாளி, 20, நெடுங்குளம் வசந்தகுமார், 21, ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக எஸ்.பி., பிரசன்ன குமார் தெரிவித்தார்.
கைதான ஏழு பேரும் நாங்குநேரி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஒரே சமூகத்தினர் என, எஸ்.பி., தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: திரு நெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, மது போதையை விட, 'ஜாதி போதை' இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட, ஒன்பது பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மற்ற சமூகங்களை சேர்ந்தவர்களை தாக்கும் நோக்கில் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் தலித். காயமுற்றவர்களில் ஒருவர் யாதவர், நான்கு பேர் நாடார் சமூகத்தினர். இவர்களுக்கும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே பள்ளிக்கூட மோதலில், நாங்குநேரி தலித் மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்கள், இந்த சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதை வெறும் கஞ்சா போதை, குடி போதை என, ஒதுக்கி விட முடியாது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தென் மாவட்டங்களில் புறையோடி போயிருக்கும் ஜாதிய போதை தான், இந்த சம்பவத்தின் பின்னணியாகும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களக்காடு வழியாக, தென்காசி சென்று, பின், டூ - வீலர்களில் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழியாக புதியம்புத்துார் வந்துள்ளனர்.
அங்கிருந்து சீவலப்பேரி வரும் வழியில், அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், சிலரது பின்னணியிலும் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என, தெரிகிறது. ஏழு பேர் கைதான நிலையில், மேலும் சிலரை தேடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
'ரத்த ஆறு தான் ஓடுகிறது'
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி கொலை சம்பவ காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளை மந்தமாக கடந்து விட்ட முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது. தி.மு.க., ஆட்சியில் ரத்த ஆறு தான் ஓடுகிறது. பட்டியலின மக்களை அச்சம், பதற்றத்துடன் வைத்திருப்பது தான் தி.மு.க., அரசின் சாதனையா?
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
முடங்கிய அரசு நிர்வாகம்
அப்பாவி மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க துப்பற்ற நிலையில், தி.மு.க., அரசு முடங்கி கிடப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கஞ்சா போதையை கட்டுப்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அரசு, கஞ்சா சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியதன் தீய விளைவு தான் இத்தகைய தாக்குதல்கள்.
- அன்புமணி, பா.ம.க., தலைவர்
வெட்கக்கேடானது
திறனற்ற தி.மு.க., அரசின் நிர்வாகத்தால், எங்கு பார்த்தாலும் கஞ்சாமயமாகி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும், மக்கள் நலனையும் ஒருசேர கொன்று விட்டு, 'வெல்வோம் ஒன்றாக' என்று, தி.மு.க., அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது.
- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்
'மக்களை திணறடிக்கிறது'
ஐந்து ஆண்டுகளில், 65,000 கிலோவுக்கு அதிகமாக கஞ்சாவும், 8,000 கிலோவுக்கு அதிகமாக போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில், ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை பாதித்த வன்முறை, இறுதி நாட்களில் கூட, மக்களை திணறடித்து வருகிறது.
- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்
'ரூ. 1 கோடி இழப்பீடு கொடுங்க'
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே நடந்த வன்முறை வெறியாட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு கஞ்சா போதைதான் காரணம். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தடையின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைக்கின்றன.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
இது தான் ஆட்சியின் லட்சணமா?
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில், பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., எங்கே? நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழு ங்கு லட்சணம் இது தானா? ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் துாக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் பாதுகாப்பை பற்றி துளியும் யோசிக்காத இந்த ஆட்சி, துாக்கி எறியப்படுவது உறுதி
- விஜய் த.வெ.க., தலைவர்

