தங்கம் கடத்தலில் தொடர்புடைய புதுக்கோட்டை புள்ளிக்கு வலை
தங்கம் கடத்தலில் தொடர்புடைய புதுக்கோட்டை புள்ளிக்கு வலை
ADDED : நவ 17, 2024 01:38 AM

தங்கம் கடத்தல் சம்பவத்தில், முக்கிய புள்ளியை கண்டுபிடிக்க முடியாமல், சுங்கத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலையத்தில், 'ஏர் ஹப்' என்ற பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்திய, ஷபீர் அலி என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அனுமதி
அவருடன், கடையில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் இலங்கை பயணி உட்பட ஒன்பது பேரை, சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜூன் இறுதியில் கைது செய்தனர்.
விமான நிலையத்தில் கடை நடத்த உரிமம் பெற, ஷபீர் அலீக்கு பா.ஜ., பிரமுகர் பிரித்வி உதவியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், சிறையில் உள்ள ஷபீர் அலி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட சிலர் மீது, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இப்பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க முடியாமல், சுங்கத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இது குறித்து, சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடத்தலில் ஈடுபட்ட ஷபீர் அலி, சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் கடை நடத்த அனுமதி கோரி உள்ளார்.
இதற்காக, அவருக்கு சென்னையில் உள்ள சிலர் உதவியுள்ளனர். அனுமதி கோரும் கடிதத்தில், என்ன மாதிரியான கடை என்பது உள்ளிட்ட விபரங்களை குறிப்பிடவில்லை.
தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாக சுங்கத்துறையால் தேடப்படும் நபர், புதுக்கோட்டையை சேர்ந்த முக்கிய புள்ளி. கடத்தல் தங்கம் பாதுகாப்பாக வெளியே போனதும், புதுக்கோட்டை புள்ளி சொல்கிற நபரிடம் அது சேர்க்கப்படும்.
இப்படி வெளியே கடத்திச் செல்லும் தங்கத்தை வைத்து, சட்டவிரோத பண பரிமாாற்றத்தில் ஈடுபட்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும் விசாரிக்க உள்ளது.
தீவிர விசாரணை
புதுக்கோட்டை முக்கிய புள்ளி பிடிபட்டால், இது தொடர்பான உண்மைகள் வெளியாகலாம். இதற்கிடையில், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த பலரிடமும், தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த கடத்தல் பின்னணியில், புதுக்கோட்டை முக்கிய புள்ளி இருப்பதால், அவரை நோக்கியே விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாதபடி நடவடிக்கை எடுத்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -