ADDED : ஜூலை 13, 2025 01:59 AM

சென்னை: 'எனக்கு புது ரத்தம் பாயத் துவங்கியுள்ளது; பா.ம.க.,வின் நிகழ்காலமும், எதிர்காலமும் நான் தான்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
சமூக நீதியின் அடையாளமாகத் திகழும் பா.ம.க., வரும் 16ம் தேதி, 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், பா.ம.க., சாதித்தவை ஏராளம்.
மக்கள் நலன் சார்ந்து, எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பா.ம.க., உள்ளது. தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி, பா.ம.க., என்பதை காலம் பதிவு செய்துள்ளது.
என் வாழ்நாளில், 95,000 கிராமங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறேன். பா.ம.க., நிர்வாகிகள் குறைந்தது 95 கிராமங்களுக்கு நேரில் சென்று, மக்களை சந்திக்க வேண்டும். அரசியல் ரீதியாக மட்டுமல்ல; சட்ட ரீதியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், திரளான மக்கள் வாயிலாகவும் எனக்கு போராடத் தெரியும்.
பல போராட்டப் பாதைகளை உருவாக்கிய நான், புதுப் பாதையை உருவாக்கி, மக்களுக்காக போராடுவேன். எப்போதும் போல துடிப்புடன், ஒவ்வொருவரின் குரல்களையும் நான் உள்வாங்கி கொண்டு தான் இருக்கிறேன்.
இதுவரை நாம் கடந்து வந்த 36 ஆண்டுகளை விட, இந்த 37-ம் ஆண்டு பல புதிய அனுபவங்களை தந்துள்ளது. முன்பை விட புதிய உற்சாகத்துடன், புதிய எழுச்சியுடன், எந்த போராட்டத்திற்கும் தயாராக இருக்கிறேன். இனி பா.ம.க.,வுக்கு பொற்காலம் தான்.
தொண்டர்களின் உற்சாகக் குரலே என்னை புதுப்பிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது; இன்னும் போராடச் சொல்கிறது; எதிரே எத்தனை பேர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல் மோதிப் பார்க்கச் சொல்கிறது;
எதிர்க்க, இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது; இத்தனை தெம்பும், தினவும் தொண்டர்களின் அரவணைப்பு தான் கொடுக்கிறது.
தொண்டர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற, எனக்குள் புது ரத்தம் பாயத் துவங்கியுள்ளது.
அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, சந்தேகமோ பா.ம.க.,வினருக்கு தேவையில்லை. பா.ம.க.,வின் நிகழ்காலமும், எதிர்காலமும் நான் தான். போர் குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது; அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

