தி.மு.க.,வில் இளைஞர் அணிக்கு முக்கியத்துவம்: புதிதாக 'பூத் டிஜிட்டல் முகவர்' பதவி நியமனம்
தி.மு.க.,வில் இளைஞர் அணிக்கு முக்கியத்துவம்: புதிதாக 'பூத் டிஜிட்டல் முகவர்' பதவி நியமனம்
ADDED : நவ 01, 2025 05:01 AM

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வில் இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் அளித்து, பூத் கமிட்டியில், 'பூத் டிஜிட்டல் முகவர்' எனும் புது பதவி வழங்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, தேர்தல் பணி மேற்கொள்ள, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பி.எல்.ஏ., - 2 எனும், 'பூத் லெவல் ஏஜன்ட்'; பி.எல்.சி., எனும், 'பூத் லெவல் கமிட்டி' ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.
இதில், பி.எல்.ஏ., - 2, ஓட்டுச்சாவடிக்கு ஒருவரும், பி.எல்.சி.,க்கு, 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என செயல்படுவர்.
இந்நிலையில், தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இத்தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு, கட்சி சார்ந்த நிர்வாகியை நியமிக்கும் பணியை, தி.மு.க., தலைமை மேற்கொண்டு உள்ளது.
அதில் இளை ஞ ர் அணியில், 30 வயதுக்கு கீழ் மற்றும் பட்டதாரியாக உள்ளவர்களை, பி.டி.ஏ., எனும், 'பூத் டிஜிட்டல் ஏஜன்ட்'டாக நியமிக்கும்படி, சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைமை, அந்தந்த மாவட்டச்செயலருக்கு உத்தரவிட்டது.
அதன்படி இளைஞர் அணியினர், 'பூத்'களில், பி.டி.ஏ., எனும் புது பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
வரும் தேர்தலில், 18 முதல் 35 வயதுள்ளவர்களின் ஓட்டுகளை தி.மு.க., பெரிய அளவில் பெற வேண்டும் என, உதயநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வேட்பாளர்களை தேர்வு செய்தல், ஓட்டுச்சாவடி, தேர்தல் பணியில் உதயநிதியின் பங்களிப்பு அதி கம் இருக்கும்.
இ ளைஞர் அணியினருக்கு, வருவாய் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், தன்னுடைய ஆதரவாளர்களாக இருப்போருக்கு, 40 'சீட்' கேட்கும் வகையில், உதயநிதி கவனம் செலுத்துகிறார்.
தி.மு.க., தலைமையும், எந்த தேர்தலிலும் இல்லாதபடி, பூத் கமிட்டியில் கட்சி சார்பில் இளைஞர் அணியினருக்கு புது பதவியை வழங்கியுள்ளது.
சில நாட்களாக டிஜிட்டல் முகவர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் குறித்த விபரங்களையும், கட்சி தலைமை உறுதி செய்துள்ளது. மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, மா நில பொறுப்பு வழங்கிவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

