ADDED : அக் 02, 2025 03:56 AM

விண்வெளியில் உலகின் முதல் தனியார் விண்வெளி மையம் (ஹெவன் 1) அடுத்தாண்டு (2026 மே) அமைய உள்ளது.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன், கனடா இணைந்து பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை (ஐ.எஸ்.எஸ்.,) 1998ல் அமைத்தன. 26 ஆண்டுகளை கடந்து இன்றும் செயல்பாட்டில் உள்ளது. இதன் நீளம் 358 அடி. அகலம் 239 அடி. இதன் நிறை 4.5 லட்சம் கிலோ.
இது போல சீனா 'டியான்காங்' விண்வெளி மையத்தை 2021ல் நிறுவியது. இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி 2028ல் தொடங்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்நிலையில் உலகில் முதன்முதலாக தனியார் நிறுவனம் சார்பில் விண்வெளி மையம், விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் பெயர் 'ஹெவன் 1'. அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'வாஸ்ட்' வடிவமைத்துள்ளது. ஐ.எஸ்.எஸ்., போல விண்வெளியில் மிதந்தபடி சுற்றி வரும். இதில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.
என்ன வித்தியாசம்
ஐ.எஸ்.எஸ்.,-ல் இருந்து 'ஹெவன் 1' மேம்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ்.,-ல் இருக்கும் 'ஸ்பார்டன்' உட்
புறங்களைப் போல் இல்லாமல், இதன் உட்புறம் மென்மையான, மெத்தை சுவர்கள், மரத்தாலான பலகைகளைக் கொண்டிருக்கும், இது விண்வெளியில் வீரர்கள் வசதியாக தங்குவதற்கு உதவும்.
பூமியில் இருந்து 425 கி.மீ., உயரத்தில் 'ஹெவன் 1' நிலைநிறுத்தப்படும். இதன் விட்டம் 14.7 அடி. உயரம் 33 அடி. இது அளவில் ஐ.எஸ்.எஸ்., உடன் ஒப்பிடும் போது எட்டில் ஒரு பங்கு தான் இருக்கும். வெளிப்புறத்தை பார்ப்பற்கு 3.5 அடி விட்ட கண்ணாடி
ஜன்னல் இருக்கும்.
சவால்கள் என்ன
விண்வெளிக்கு செல்வது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால் நடைமுறையில் பூஜ்யம் புவிஈர்ப்பு விசையில் விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வில் ஈடுபடுவது சவாலானது. ஈர்ப்பு விசை
இல்லாததால் பூமியை போல கிடைமட்டமாக துாங்க முடியாது. ஐ.எஸ்.எஸ்.,-ல் ஒரு துாங்கும் பையில் உள்ளே இருந்து, அடுத்தவர்களின் மீது மோதாமல் இருக்க அதை சுவருடன் இணைத்து கொண்டு தான் துாங்க முடியும். ஆனால் இந்த 'ஹெவன்-1'ல் இந்த தொழில்நுட்பம் இன்னும் சொகுசாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் உடன்...
'ஹெவன்-1' மையத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று வருவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே ஐ.எஸ்.எஸ்., மையத்துக்கும் ஸ்பேஸ் எக்ஸ்-சின் டிராகன் விண்கலத்தில் தான் வீரர்கள் சென்று வருகின்றனர்.