புதிய மனைப்பிரிவு மதிப்பு 'கிடுகிடு': வீட்டு மனை வாங்குவோர் அதிர்ச்சி
புதிய மனைப்பிரிவு மதிப்பு 'கிடுகிடு': வீட்டு மனை வாங்குவோர் அதிர்ச்சி
ADDED : நவ 24, 2024 11:20 PM

சென்னை: புதிய மனைப் பிரிவு திட்டங்களுக்கு, அதிகபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், வீட்டு மனை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அங்கீகாரம் இல்லாத மனை விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முறையான அங்கீகாரம், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவுடன் மனைகளை விற்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இவ்வாறு, புதிய மனை பிரிவுகளை உருவாக்கும் போது, அதற்கான அங்கீகார நடைமுறைகள் முடிந்ததும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.
அதிகபட்ச மதிப்பு
இதற்கான விண்ணப்பங்கள் சார் - பதிவாளர் வாயிலாக, மாவட்டப் பதிவாளருக்கு செல்லும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அந்த குறிப்பிட்ட பகுதியில், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கான மதிப்பு கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மதிப்புக்கு இணையாக அல்லது அதைவிட சற்று அதிக தொகை புதிய மனைப்பிரிவுக்கு வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில், பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், மாவட்டப் பதிவாளர்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, புதிய மனைப் பிரிவுக்கு, அக்கம்பக்கத்தில் உள்ளதைவிட, அதிகபட்ச மதிப்பு நிர்ணயிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக புதிய மனைப் பிரிவுக்கு அக்கம் பக்கத்து மனைகளின் மதிப்பை அடிப்படையாக எடுத்துக் கொள்வோம்.
தற்போது அக்கம் பக்கத்தில் அமலில் உள்ள மதிப்பை விட, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் இருப்பதை கவனத்தில் கொண்டு மூன்று மடங்கு வரை அதிகமாக மதிப்பு நிர்ணயிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு பகுதியில் அக்கம் பக்கத்தில் ஒரு சதுர அடிக்கான மதிப்பு, 550 ரூபாய் என இருந்தால், புதிய மனைப்பிரிவுக்கு, 1,300 ரூபாய் வரை மதிப்பு நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும்.
இதில் ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம், அந்தந்த மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி.,யிடம் மேல்முறையீடு செய்யலாம். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தள்ளிப்போடுவர்
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
பல நகரங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை அதிகமாக இருப்பதால், வீட்டு மனை வாங்க நினைக்கிறோம். இதற்கும் வழிகாட்டி மதிப்பை உயர்த்தினால், மனை வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடும் நிலைதான் ஏற்படும்.
புதிய மனைப்பிரிவுக்கு நிர்ணயிக்கப்படும் உயர் மதிப்பால், சில மாதங்களிலேயே அக்கம் பக்கத்து மனைகள் மற்றும் வீடுகளின் மதிப்பும் உயர்ந்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.