தி.மு.க., கூட்டணியில் புதுசுகள் வரவால் பழைய கட்சிகளுக்கு தொகுதி குறைகிறது
தி.மு.க., கூட்டணியில் புதுசுகள் வரவால் பழைய கட்சிகளுக்கு தொகுதி குறைகிறது
UPDATED : பிப் 21, 2026 07:51 AM
ADDED : பிப் 21, 2026 04:51 AM

- நமது நிருபர் -
தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெறுவதால், அந்த கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதி வழங்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தே.மு.தி.க., கமல் தலைமையிலான ம.நீ.ம., ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க, ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்றவற்றுக்கு, தலா ஒரு தொகுதியை குறைத்து தர, தி.மு.க., முடிவு செய்துள்ளது.
ஒற்றை இலக்கம் கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் நான்கில், அக்கட்சி வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரு கட்சிகளும் தலா இரு தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, மூன்று தொகுதிகள் ஒதுக்கியதில், ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.
எனவே, இந்த கட்சிகளிடம் இருந்து, தலா ஒரு தொகுதியை எடுத்து, தே.மு.தி.க., மற்றும் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
கடந்த தேர்தலில், 174 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த 41 தொகுதிகளில் இருந்து, தே.மு.தி.க.,விற்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க தீர்மானித்துள்ளது.
25 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக ஒரு 'சீட்' ஒதுக்கி, ஏழு தொகுதிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு கடந்த தேர்தலை போலவே 25 தொகுதிகள் கொடுக்கப்படும். இன்னும் சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இணைந்தால், அக்கட்சிகளுக்கும் தகுதி அடிப்படையில் தொகுதிகள் வழங்குவது அல்லது தி.மு.க., சின்னத்தில் போட்டியிட வைப்பது என தி.மு.க., முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

