போக்குவரத்துக்கு தயாரானது புதிய பாம்பன் ரயில் பாலம்
போக்குவரத்துக்கு தயாரானது புதிய பாம்பன் ரயில் பாலம்
UPDATED : டிச 28, 2024 04:57 AM
ADDED : டிச 28, 2024 01:03 AM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்ல பாம்பன் ரயில் பாலம் முக்கிய வழித்தடமாக இருந்தது. கடந்த 1914ல் கட்டப்பட்ட இப்பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை எனக்கூறி, புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் 2019ல் துவக்கியது.
ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது, 545 கோடி ரூபாய் செலவில், 101 துாண்களுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட முதல் செங்குத்து துாக்கு பாலம் என்ற பெருமையோடு, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்துள்ளன.
இப்பாலத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில், மணிக்கு 80 முதல், 90 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். முன்னதாக, நவ., 28ல் பாதுகாப்பு ஒப்புதல் அறிக்கை வெளியிட்டார். புதிய பாலத்தில் 75 கி.,மீ., வேகத்திலும், நடுவில் 72 மீட்டர் நீளமுள்ள துாக்கு பாலத்தில், 50 கி.மீ., வேகத்திலும் ரயில்களை இயக்கலாம்.
'பாலம் கட்டுமானம், வடிவமைப்பு விஷயத்தில், ஆர்.டி.எஸ்.ஓ., ஆலோசனை பெறாமல் புறக்கணித்துள்ளனர். இந்த துாக்கு பாலத்தின் முன்மாதிரி, ரயில்வே வாரியத்திடம் இல்லாததால், வாரியத்தின் அனுமதியுடன் மும்பை ஐ.ஐ.டி., ஒப்புதலில் அமைத்துள்ளனர். 'இதன் வாயிலாக, ரயில்வே வாரியம் சொந்த வழிகாட்டுதலை மீறி உள்ளது. பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட,  'வெல்டிங்' பணிகளில் விதிமீறல்கள் உள்ளன' என, பாதுகாப்பு ஆணையர் தன் அறிக்கையில் கூறியிருந்தார்; இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திறப்பு விழா
அதைத்தொடர்ந்து, ஆணையர் சுட்டிக்காட்டிய விஷயங்கள் தொடர்பாக, ஆர்.வி.என்.எல்., நிறுவனம் சார்பில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பாலம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
இதுகுறித்து. ஆர்.வி.என்.எல்., நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், புதிய பாம்பன் பாலம் கட்டமைப்பின் தலைமை ஆலோசகர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:பாம்பன் பாலம், 2.05 கி.மீ., நீளமுடையது. நாட்டிலேயே தனித்துவமான, 72 மீட்டர் செங்குத்து, 'லிப்ட் ஸ்பான்' கொண்டது.
பாலத்தின் வடிவமைப்பு, சர்வதேச ஆலோசகர் வாயிலாக உருவாக்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி.,யால் சரிபார்க்கப்பட்டது. மும்பை ஐ.ஐ.டி.,யிடம் வடிவமைப்புக்கான கூடுதல் சான்று பெறப்பட்டது.
இரு முறை சான்றுகளை சரிபார்த்த பின், பாலத்தின் வடிவமைப்பு தெற்கு ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டது. பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணிக்கு, 5,800 டன் துருப்பிடிக்காத இரும்பு, 34,000 டன் சிமென்ட் மற்றும் கற்கள் உடன் கூடிய கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரும்பு துருப்பிடிக்காமல் இருக்க, துத்தநாக முலாம் பூசப்பட்டுள்ளது. துாக்கு பாலத்தின், 'கியர் பாக்ஸ்' உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும், ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
இந்த பாலத்தின் வழியாக, 22 மீட்டர் உயரம் உடைய கப்பல்கள் செல்ல முடியும். சாலை பாலமும், துாக்கு பாலத்தின் உயரமும் ஒரே அளவு உள்ளது.உலகத்தரம்
கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து பொருட்களும், கடல் வழியே கொண்டு வரப்பட்டன. துாக்கு பாலத்தை தனித்தனியாக பிரித்து, அருகில் உள்ள கரைப்பகுதியில் இருந்து கொண்டு வர, மூன்று மாதங்களும், முழுமையாக கட்டமைக்க ஏழு மாதங்களும் ஆகின. உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பாக இது இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

