பொது தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டு வினியோகத்தில் புதிய நடைமுறை
பொது தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டு வினியோகத்தில் புதிய நடைமுறை
ADDED : ஜன 09, 2025 05:58 AM

தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டு வினியோக நடைமுறையில் இந்தாண்டு முதல் தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது.
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வின்போது மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கப்படுகிறது. தேர்வுக்கு முன் அந்த விடைத்தாளுடன் இணைப்பதற்காக தேர்வுத்துறையில் இருந்து முகப்பு சீட்டுகள் வழங்கப்படும்.
தற்போது வரை இந்த முகப்பு சீட்டுகளை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக, 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி அந்தந்த பள்ளியில், 'டவுன்லோடு' செய்தும், முகப்பு சீட்டை விடைத்தாளுடன் நுாலால் கட்டி தைக்கும் பணியும் நடக்கும். ஒரு மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான முகப்பு சீட்டுகள் இணைக்க வேண்டும் என்பதால் இப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேர்வுத் துறை சார்பில் பணமும் வழங்கப்பட்டது.
இந்தாண்டு முதல் இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அந்தந்த மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முகப்பு சீட்டுகள், தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு வழங்கப்படுகின்றன.
'தினமலர்' செய்தி
மதுரையில், இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு தனியார் பள்ளியில், விதிமீறி முகப்பு சீட்டுகள் பலமுறை, 'டவுன்லோடு' செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கல்வி அலுவலர்கள், மாணவர், பெற்றோர் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டைத் தவிர்க்கவே, தற்போது புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் -

