அமெரிக்காவின் புதிய வரி உயர்வு: பின்னலாடை ஏற்றுமதி பிரகாசிக்க வாய்ப்பு
அமெரிக்காவின் புதிய வரி உயர்வு: பின்னலாடை ஏற்றுமதி பிரகாசிக்க வாய்ப்பு
ADDED : ஏப் 05, 2025 05:40 AM

திருப்பூர்; அமெரிக்காவின் புதிய வரி உயர்வு, துவக்கத்தில் குழப்பமாகவும், பூதாகரமாகவும் தெரிந்தாலும், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், எதிர்காலத்தில் பிரகாசமாக மாற வாய்ப்புள்ளதாக, பின்னலாடைத் தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியா அதிகபட்சமாக ஏற்றுமதி செய்யும், 20 நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அதேபோல், நம் நாட்டின் இறக்குமதி வர்த்தகத்தில், 4வது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவுக்கான நம் நாட்டின் மாதாந்திர ஏற்றுமதி, 67 ஆயிரத்து 240 கோடி ரூபாயாகவும், அமெரிக்காவின் இறக்குமதி மதிப்பு, 26 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருக்கிறது. நம் நாட்டின், ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 'டாப் 10' நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
திருப்பூரின் வர்த்தகம்
அதிக ஏற்றுமதி நடக்கும், 10 நாடுகளுக்கான மொத்த ஏற்றுமதியில், அமெரிக்க ஏற்றுமதி மட்டும், 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, திருப்பூரில் இருந்து ஆயத்த ஆடைகள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.
இறக்குமதி வரியினங்களை, அமெரிக்கா உயர்த்தி அறிவித்துள்ளது. இது, சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கம்போடியா - 49 சதவீதம், வியட்நாம் - 46 சதவீதம், இலங்கை - 44 சதவீதம், சீனா - 34 சதவீதம், இந்தியா - 27 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது.
'பரஸ்பரம்' வரிவிதிப்பு
''இறக்குமதி வரி விதிப்பு என்பது, பரஸ்பர வரிவிதிப்பு என, அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது நுணுக்கமானது. அதாவது, 'அமெரிக்க பொருள் இறக்குமதி வரியை, பிற நாடுகள் குறைத்தால், அதற்கு ஏற்ப, நாங்களும் வரியை குறைப்போம்' என்ற வகையில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது'' என்று தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 40 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது அமெரிக்கா. திருப்பூர் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யும் போது, அமெரிக்காவில், 16 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது; இனி, கூடுதலாக, 27 சதவீதம் வரி செலுத்த நேரிடும்.
''அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அறிவிப்பு, துவக்கத்தில் குழப்பமாக இருந்தாலும், இந்தியாவின் எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும்; இருப்பினும், நமது ஒவ்வொரு துறைகளும், அரசு ஆதரவுடன், முழு அளவில் தயாராக வேண்டும்'' என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3 மாதத்தில் எதிரொலி தெரியும்
திருப்பூர் பின்னலாடைகளுக்கு, 16 சதவீத வரி விதிக்கப்படுகிறது; இனி, 43 சதவீதமாக உயரும். இதனால், அமெரிக்க வர்த்தகர்கள், திருப்பூர் பின்னலாடை ஆர்டர்கள் மீது, தள்ளுபடி சலுகை கோரவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு, அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது; மற்ற நாடுகளின் ஆர்டர்கள், திடீரென திசைமாறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க, நமது கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
புதிய வரி உயர்வுக்கு ஏற்ப, ஆடைகளின் விலையை அமெரிக்க வர்த்தகர்கள் உயர்த்த வேண்டும்; அல்லது, நம்மிடம், விலை நிர்ணயத்தில் சலுகை கோரவும் வாய்ப்புள்ளது. புதிய வரி உயர்வு சுமையை சமாளிக்க, மத்திய அரசும் ஊக்குவிப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில், இதன் எதிரொலி தெரியவரும்.
- சுப்பிரமணியன்
தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்
இனிவரும் காலம் நமக்கு சாதகம்
அமெரிக்காவின் புதிய வரி உயர்வு; இந்தியாவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. நமது போட்டி நாடுகளுக்கு, அதிகபட்ச வரி விதிப்பு செய்துள்ளனர். இந்தியாவுடன் வர்த்தக உறவை அமெரிக்கா விரும்புவதாக தெரிகிறது; எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கு, இது காரணியாக அமையும். துவக்கத்தில் பல குழப்பங்கள் இருக்கும்; எதிர்காலம் நமக்கு சாதகமாக இருக்கும். மத்திய அரசும், தொழில்துறையினரும், வர்த்தக வாய்ப்புகளை சாதகமாக மாற்றிட, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா சண்முகம், உறுப்பினர், தேசிய வர்த்தக வளர்ச்சி வாரியம்
வர்த்தகர்கள் 'தள்ளுபடி' வலியுறுத்தல்
'பரஸ்பரம்' வரிவிதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாம் வரியை குறைத்தால், அதற்கு ஈடாக, அமெரிக்காவும் குறைக்க வாய்ப்புள்ளது. மிகவும் குழப்பமான நிலையில், சரியான தெளிவு கிடைக்க மூன்று மாதமாகும். புதிய வரி விதிப்பு உயர்ந்தாலும் சரி, கைவசம் பெற்றுள்ள ஆர்டர்களை எப்படி அனுப்பி வைக்க முடியும்? என்ற கவலை எழுந்துள்ளது. தற்போதிருந்தே, அமெரிக்க வர்த்தகர்கள் விலையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்த துவங்கி விட்டனர்; அவ்வாறு செய்தால், நஷ்டத்தை சந்திக்க நேரிடும்; மத்திய அரசு சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இளங்கோவன்
தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்).
எதிர்காலம் வரப்பிரசாதமாக மாறும்
அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வால், உலக நாடுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது; எதிர்வரும் நாட்களில், வரிவிதிப்பு பரஸ்பரம் குறையவும் வாய்ப்பு இருக்கலாம். நமது போட்டி நாடுகளுக்கு வரி மிகவும் அதிகம் என்பதால், இந்தியாவுக்கு கூடுதல் ஆர்டர் வர வாய்ப்புள்ளது; ஆனால், கூடுதல் ஆர்டர்களை ஏற்று உற்பத்தி செய்யும் அளவுக்கு, கட்டமைப்பு இல்லை. வரி உயர்வு என்பது துவக்கத்தில் குழப்பமாக இருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை, எதிர்காலத்தில் வரப்பிரசாதமாக மாறவும் வாய்ப்புள்ளது.
- தனஞ்செயன்
ஆடிட்டர்