UPDATED : டிச 27, 2024 05:33 AM
ADDED : டிச 26, 2024 10:20 PM

ஆங்கில புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு, 2025ம் ஆண்டை வரவேற்க பலரும் தயாராகி வருகின்றனர். கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால், ஆண்டின் துவக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப்பலிகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
'புள்ளிங்கோ'க்கள் பலர் வாகனங்களில் சாகசம் செய்வது, அதிவேகமாக செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு, விபத்தில் சிக்குகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலையில் இருந்தே, போலீசார் வாகன தணிக்கை, ரோந்து என போலீஸ் கெடுபிடிகள் அதிகமாக இருந்து வருகின்றன. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூடுதல் செக்போஸ்ட்
இந்தாண்டு புத்தாண்டு துவக்கத்தில், விபத்து, சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல், புதிய ஆண்டை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில், போலீசார் தயாராகி வருகின்றனர். புத்தாண்டுக்கு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
கண்காணிப்பு தீவிரம்
போலீசார் கூறியதாவது: புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். 31ம் தேதி இரவு, அடுத்த நாள் என, இரு நாட்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு, ரோந்து, வாகன தணிக்கை உள்ளிட்டவை குறித்து உயரதிகாரிகள் ஆலோசித்து வருகிறோம்.
இரு நாட்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உள்ள 'செக்போஸ்ட்'கள் தவிர்த்து, பிரதான ரோடுகளில் முக்கிய சந்திப்புகளில் கூடுதலாக தற்காலிக 'செக்போஸ்ட்' அமைக்கப்பட உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்பது, அடுத்தவர்களை எவ்விதத்திலும் இடையூறு செய்யாமல், மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் இயக்கக்கூடாது.
போதையில் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் கூச்சலிடுவது, நடுரோட்டில் ஆட்டம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, 'புள்ளிங்கோ'க்களின் நடவடிக்கை கண்காணிக்கப்படும். அதிவேகமாக, விபத்து ஏற்படும் வகையில் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபட கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -