அடுத்தது தமிழகம் தான்: மோடி அளித்த உறுதியால் பா.ஜ.,வினர் உற்சாகம்
அடுத்தது தமிழகம் தான்: மோடி அளித்த உறுதியால் பா.ஜ.,வினர் உற்சாகம்
ADDED : நவ 21, 2025 01:15 AM

சென்னை: 'அடுத்து தமிழகத்தில் தான் எங்களின் முழு கவனம்; தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவும்' என, பிரதமர் மோடி தெரிவித்திருப்பதால், தமிழக பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கோவை கொடிசியா வளாகத்தில், இயற்கை வேளாண் மாநாட்டை, பிரதமர் மோடி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். பின், தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம், சில நிமிடங்கள் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக மோடி பேசியுள்ளார்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்துள்ள அமோக வெற்றிக்கு, பிரதமர் மோடியின் தீவிர பிரசாரமே முக்கிய காரணம். பீஹார் வெற்றியால், கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மகிழ்ச்சியுடன் இருந்தார்.
தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், 'அடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் தான் முழு கவனமும் செலுத்தப்படும்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை நோக்கி, பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள தமிழக பா.ஜ., நிர்வாகிகள், புதிய செயல் திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளனர். மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசி, பூத் கமிட்டி கூட்டம், புதிய வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக செயல்படுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

