ADDED : ஜன 26, 2024 11:55 PM

புதுடில்லி :மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் வாயிலாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.
கடந்த 2014ல் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்ததும், அக்கட்சியைச் சேர்ந்த அருண் ஜெட்லி மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்றார். 2014 - 15 முதல் 2018 - 19 வரையிலான ஐந்தாண்டு பட்ஜெட்டை, அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
அதன் பின் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, பியுஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பான இடைக்கால பட்ஜெட்டை, பியுஷ் கோயல் தாக்கல் செய்தார்.
அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அப்போது, மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். இந்திராவுக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது பெண் என்ற பெருமையை நிர்மலா பெற்றார்.
கடந்த 2019 - 20 முதல் 2023 - 24 வரையிலான ஐந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2024 - 25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, பிப்., 1ல் ஆறாவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்கு முன், நிதி அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே, தொடர்ச்சியாக ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் வாயிலாக, மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சமன் செய்ய உள்ளார்.

