'பொருட்கள் விலை அதிகரித்ததாக பொய் பிரசாரம்': நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
'பொருட்கள் விலை அதிகரித்ததாக பொய் பிரசாரம்': நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
UPDATED : மார் 23, 2025 05:26 AM
ADDED : மார் 23, 2025 01:16 AM

சென்னை: ''சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலான பிறகு, பொருட்களின் விலை அதிகரித்ததாக, பொய் பிரசாரம் செய்கின்றனர்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
பிரதமர் மோடி மூன்றாவது முறை வெற்றி பெற்ற பிறகு, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'வளர்ச்சி அடைந்த பாரதம்' 2047ல் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மாவட்டம்
தற்போது அமெரிக்காவில் அரசு மாறி உள்ளது. அவர்கள் நம் நாட்டு பொருட்களை வாங்க முன் வருகின்றனர். வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா பக்கபலம். சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் பேனல்கள் உள்ளிட்டவை அதிகமாக உள்ளன.
அவற்றை அமெரிக்காவுக்கு அனுப்பினால், நமக்கு பிரச்னை ஏற்படுமா என்பதை எல்லாம் மனதில் வைத்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சில மாவட்டங்கள் சிறப்பாக முன்னேறிய நிலையில், சில மாவட்டங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளன.
இவற்றை மாற்றவே, 'ஆர்வமுள்ள மாவட்டங்கள்' திட்டத்தை மோடி துவக்கி உள்ளார். பின் தங்கிய மாவட்டமே இருக்கக் கூடாது என, பிரதமர் நினைக்கிறார்.
தமிழகத்துக்கு கடந்த, 10 ஆண்டுகளில், ஜன்தன் திட்டத்தில் 1.7 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தில், 89 லட்சம் வீடுகளுக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ரயில்வே வழித்தடம், தமிழகத்தில் அமைக்கப்பட்டுஉள்ளது.
அதிக வரிப்பணம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 63,246 கோடி ரூபாயில், 60 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது.
தெரு வியாபாரிகள் துவங்கி, விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி என, தமிழகத்துக்கு ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர்.
மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு.
தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய போதும், மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு வாயிலாக, அரசியல் கட்சியினர், மத்திய அரசின் பட்ஜெட்டின் சிறப்புகளை, திசை திருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைக்க, மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் ஊழல் குறித்து பேச விரும்பில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவியர் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, ''பெண்கள் அரசியலுக்கு வந்தால், அரசியல் சுத்தமாகும். அனைத்து விஷயங்களிலும், குறை கூறுவதை கண்டு கொள்வதில்லை.
''ஜி.எஸ்.டி., வந்த பிறகு பொருட்கள் விலை அதிகரித்ததாக, பொய் பிரசாரம் செய்கின்றனர். வரி விதிப்பு முடிவை, அனைத்து மாநிலங்களும் இணைந்தே எடுக்கின்றன,'' என்றார்.