அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை ஆடிப்போக செய்த நிர்மலாவின் அறிவிப்பு
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை ஆடிப்போக செய்த நிர்மலாவின் அறிவிப்பு
ADDED : பிப் 01, 2025 11:33 PM

மதுபானி புடவை
மதுபானி ஓவியத்துக்கு பிரசித்தி பெற்ற பீஹாரின் மதுபானி நகரில் உள்ள மிதிலா கலை மையத்துக்கு அமைச்சர் நிர்மலா சமீபத்தில் சென்றிருந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற அந்த மையத்தைச் சேர்ந்த ஓவியர் துலாரி தேவி என்பவர் நிர்மலாவுக்கு அந்த புடவையை பரிசாக அளித்ததாகவும், பட்ஜெட் தாக்கலின் போது இந்த புடவையை அணியும்படி அவர் கோரிக்கை விடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்ஜெட் பேச்சு
2019ல் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, 2 மணி நேரம், 17 நிமிடங்கள் உரை நீடித்தது. ஹிந்தி, தமிழ், உருது, சமஸ்கிருதம் என, பல்வேறு மொழிகளில் மாறி மாறி உரையாற்றி அசத்தினார்.
2020ல் மிக நீண்ட உரையாக, 2 மணி நேரம், 41 நிமிடங்கள் பேசினார். இடையில் அவரது ரத்த அழுத்தம் குறைந்து சோர்வடைந்து அமர்ந்தார். சர்க்கரை மற்றும் தண்ணீர் அருந்தி, சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் உரையை தொடர்ந்தார்.
2024ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்; 56 நிமிடங்களில் உரையை முடித்தார்.
இந்த முறை, 1 மணி நேரம் 17 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை, 10:52 மணிக்கு லோக்சபாவுக்குள் நுழைந்தார். அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அவரை வரவேற்றனர்.
பின் சில நிமிடங்களில் பிரதமர் மோடி சபைக்கு வந்தார். பா.ஜ., உறுப்பினர்கள், 'பாரத் மாதா கி ஜெய்...' என, கோஷமிட்டனர். எதிர்க்கட்சியினர், 'ஜெய் பீம்..., ஜெய் சம்விதான்...' என, கோஷமிட்டனர்.
பட்ஜெட் உரையை வாசிக்க நிர்மலா எழுந்ததும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிடத் துவங்கினர். கும்பமேளா கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி, சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
'மத விரோத கட்சி ஒழிக' என, கூச்சலிட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கள் சிலர், சபையில் இருந்து வெளிநடப்பு செய்து, பின் மீண்டும் வந்தனர். இந்த அமளியில் திரிணமுல் காங்., உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
பட்ஜெட் உரையின்போது, 'ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோருக்கு வருமான வரி கிடையாது' என்ற அறிவிப்பை அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டதும், எதிர்க்கட்சி வரிசையில் மயான அமைதி நிலவியது.
அதுவரை கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களும், மொத்தமாக வாயடைத்துப் போயினர். அதன் பின், எதிர்க்கட்சி வரிசையில் எந்த துளிச் சத்தமும் எழவில்லை.
பட்ஜெட் உரையை முடித்தபின், பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியுஷ் கோயல் உள்ளிட்டோர், நிர்மலாவின் இருக்கை அருகில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.