தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்: நிதீஷ் - லாலு ஆலோசனை
தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்: நிதீஷ் - லாலு ஆலோசனை
UPDATED : ஜன 20, 2024 05:04 PM
ADDED : ஜன 19, 2024 11:48 PM

பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.
அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தி.மு.க., உட்பட 28 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து அந்தந்த கட்சிகளிடையே பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமாரை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று சந்தித்து பேசினார்.
பீஹாரின் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார். மூவரும் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
பின் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தப்பட்டது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. மக்கள் நலனுக்காக மாநிலத்தில் ஆட்சி செய்யும் நாங்கள், ஒன்று சேர்ந்து லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவோம்,” என்றார்.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம், 16 இடங்களை வென்ற நிலையில், கூடுதல் இடம் கேட்பதால் தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.