அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது: விஜய் குரலாக ஒலிக்கும் ஆதவ்
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது: விஜய் குரலாக ஒலிக்கும் ஆதவ்
ADDED : மே 21, 2025 05:05 AM

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காது; கட்சி தலைவர் விஜய் வழிகாட்டுதல்படிதான் இதை சொல்கிறேன்,'' என, த.வெ.க., தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
வக்பு திருத்த சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், கேரள அரசு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதை வலியுறுத்தி, பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
'பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தது தவறு' என விஜய், தெள்ளத் தெளிவாக கூறி விட்டார். அ.தி.மு.க., இப்போது ஆட்சியில் இல்லை. அவர்கள் செய்த தவறுகளுக்கு மக்கள் தண்டனை கொடுத்து விட்டனர்.
ஆட்சியில் இருந்து இறங்கிய பின், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும், தோல்வியை சந்தித்து வருகிறது.
தோல்வியில் இருக்கும் ஒரு கட்சியை விமர்சித்து பேச வேண்டிய அவசியம் த.வெ.க.,வுக்கு இல்லை. அதனால்தான், அ.தி.மு.க., குறித்து நாங்கள் பேசுவதே இல்லை.
அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. எங்கள் கட்சி தலைவர் விஜயுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர், அவரது வழிகாட்டுதல்படி தான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன்.
விஜய், தமிழகம் முழுதும் தீவிர பிரசார பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்று மாதங்களில் பிரசாரம் தீவிரமாகும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் விஜய், தன்னுடைய தீவிர பிரசார பயணம் வாயிலாக பேரதிர்வை உருவாக்குவார்; தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சியை உருவாக்குவார்.
தற்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக, எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். அதன் வாயிலாக விவாத பொருளை உருவாக்கி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
தி.மு.க., கொள்கைகளுக்கும், த.வெ.க., கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தி.மு.க.,வை அழிப்பது எங்கள் நோக்கமல்ல.
ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை, ஆளுங் கட்சியான பின், தி.மு.க., செயல்படுத்தவில்லை. கூட்டணி கட்சிகளே போராட வேண்டிய நிலையை, தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது.
இந்த நிலையை மாற்றி, தமிழகத்தில் புதிய அரசியல் களத்தை உருவாக்குவதுதான், த.வெ.க.,வின் பிரதான நோக்கம். அதை நோக்கி வேகமாக செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.