UPDATED : மார் 12, 2024 10:25 AM
ADDED : மார் 12, 2024 06:17 AM

ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க.,வில் பண வசதி இல்லாத, உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு 'ஜாக்பாட்' அடிப்பது வழக்கம். யாரும் நினைத்துக்கூட பார்க்காத சாதாரணமானவர்களுக்கும் எம்.எல்.ஏ., - எம்.பி., சீட் கொடுத்து, கட்சி சார்பில் செலவும் செய்து ஜெயிக்க வைப்பது ஜெயலலிதாவின் வழக்கம்.
இதன் காரணமாக, அடிமட்ட தொண்டர்களும் எப்போது வேண்டுமானாலும் நமது நிலைமை மாறி விடும் என்ற நம்பிக்கையோடு, கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்து வந்தனர்.
தற்போது, மாவட்ட அளவில் பதவியில் உள்ள நிர்வாகிகள், தங்களுக்கு சிபாரிசு செய்து சீட் வாங்கித் தரும்படி மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களிடம் கேட்டு வருகின்றனர். அவர்கள், 'செலவு செய்ய பணம் இருக்கா, இருந்தா சொல்லுங்க சிபாரிசு செய்கிறோம்னு' சொல்கின்றனர்.
நல்ல வேட்பாளராக இருந்தாலும், வசதி இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்தால், நாம் தான் கை காசை போட்டு செலவு செய்ய வேண்டி வரும் என சீட் கேட்பவர்களுக்கு சிபாரிசு செய்யாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
பல மாவட்டங்களிலும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள், 'ஜெ., இருந்தா நிலைமை இப்படி இருக்குமா... மாவட்ட செயலாளர்கள் போட்டி போட்டு கொண்டு வேட்பாளர்களை ஜெ., முன்னால் நிறுத்தி நாங்க செலவு செய்து ஜெயிக்க வைக்கிறோம்னு சொல்லி இருப்பாங்க...' என புலம்பி கொண்டுள்ளனர்.
-நமது நிருபர்-
