அமித் ஷாவின் ராஜதந்திரம் யாருக்கும் புரியாது: தொண்டர்கள் தரிசன நிகழ்வில் நயினார் பேச்சு
அமித் ஷாவின் ராஜதந்திரம் யாருக்கும் புரியாது: தொண்டர்கள் தரிசன நிகழ்வில் நயினார் பேச்சு
ADDED : ஏப் 19, 2025 01:22 AM

'வரும் 2026ல், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி; அதற்கான தந்திரம் அமித் ஷாவிடம் உள்ளது,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
திருவண்ணாமலையில், நேற்று, தமிழக பா.ஜ., வேலுார் பெருங்கோட்டத்தின் தொண்டர்கள் தரிசன நிகழ்வு நடந்தது.
அந்நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு கடைசி மணி அடிக்கும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுள்ளார். தி.மு.க., ஆட்சியை அவர் விரைவில் முடித்து வைப்பார். அமித் ஷா ஹரியானாவுக்குச் சென்றார். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவிலும் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்தி உள்ளார். டில்லியிலும் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார். ஆக, அவர் நினைத்தால் ஆட்சி மாற்றம் உறுதி. அவருடைய ராஜதந்திரம் யாருக்கும் புரியாது. அவருடைய பேரை கேட்டாலே எல்லோரும் நடுங்குகின்றனர்.
அதேபோல, தோல்வியை எதிரிக்கு, பரிசாகக் கொடுத்து பழக்கப்பட்டவர் பிரதமர் மோடி.
மோடி மற்றும் அமித் ஷாவால், தமிழகத்தில் வரும் 2026ல், ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
மகளிருக்கு உரிமைத் தொகையாக 1,000 ரூபாய் கொடுப்பதால், அவர்கள் ஓட்டு போட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. அதில் மண் விழப்போகிறது.
இனி வரும் காலம் பா.ஜ.,வுக்கானது. ஒரு மாத காலத்துக்குள் மீண்டும் அமித் ஷா தமிழகம் வரப் போகிறார். அப்போதும், தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்.
வரும் காலத்தில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்களுக்கு பா.ஜ.,வே முக்கிய காரணமாக இருக்கும். 2026 தேர்தலுக்குப் பின், தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படும். இது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்
- நமது நிருபர் -.

