சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நியமனத்தில் வேண்டாம் 'அரசியல்': காங்., மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி
சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நியமனத்தில் வேண்டாம் 'அரசியல்': காங்., மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி
ADDED : ஜன 16, 2025 05:56 AM

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்., சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பான பெயர் பட்டியலை தேர்வு செய்து மாநில தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் மாநில தலைமை 'அரசியல்' செய்து விட வேண்டாம் என மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
காங்., தலைமை சார்பில் தற்போது மாநில நிர்வாகிகள் நியமனத்திற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு ஜன.,18 கடைசி நாள் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதே நாளுக்குள் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் யாரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பெயர் பட்டியலையும் 72 மாவட்ட தலைவர்களிடம் கேட்டுப் பெற்றுள்ளது கட்சித் தலைமை.
இந்நிலையில், மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்த பொறுப்பாளரை மாநில தலைமை எதையும் மாற்றாமல் அகில இந்திய தலைமை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இதில் மாநில தலைமை பொறுப்பாளரை மாற்றி 'அரசியல்' செய்தால் 'மாவட்ட தலைவர்களுக்கும், பொறுப்பாளருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு, தேர்தல் பணிகள் பாதிக்கும்' என மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் தேசிய தலைமைக்கும் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: முன்னாள் மாநில தலைவர்கள் பலர் தங்களுக்கு என ஒரு ஆதரவாளர் வட்டங்களை மாவட்டங்களில் ஏற்படுத்தி தற்போதும் அரசியல் செய்து வருகின்றனர். கடைசியாக மாநில நிர்வாகிகள் தேர்விலும் கோஷ்டி தலைவர்களின் 'அரசியல்' அரங்கேறியது. தற்போதுள்ள தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவாளர் வட்டம் மிக குறுகியதாக உள்ளது.
இதனால் மாவட்டம் முதல் மாநில நிர்வாகிகள் வரை தனக்கான ஒரு கோஷ்டியை உருவாக்க அவரும் முயற்சிப்பதாக தெரிகிறது. இது தொகுதி பொறுப்பாளர்கள் நியமனத்தில் எதிரொலிக்க கூடாது. அவ்வாறு எதிரொலித்தால் தேர்தல் பணி சவாலாக இருக்கும் என்பதை அகில இந்திய தலைமைக்கும் சுட்டிக்காட்டி வருகிறோம் என்றனர்.