ADDED : அக் 17, 2024 12:46 AM

சென்னை: ''காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுவாக இருப்பதால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' வாபஸ் பெறப்படவில்லை,'' என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையின் துவக்கம் மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், இரண்டு நாட்களுக்கு, 'ரெட் அலெர்ட்' விடுத்தது.
திண்டாட்டம்
அதாவது, '21 செ.மீ.,க்கு மேல் பெய்யும்; உஷாராக இருக்க வேண்டும்' என்பதற்கான எச்சரிக்கை தான் அது.
அதற்கேற்ப, நேற்று முன்தினம், நாள் முழுதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை சோழவரத்தில் அதிகபட்சமாக, 30 செ.மீ., மழை பெய்தது. எண்ணுாரில் 23, மணலியில் 21 செ.மீ., மழை பதிவானது. மாநகரில் பரவலாக, 15 செ.மீ., வரை மழை பெய்தது.
அதேநேரம், காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்ததால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று, ஆங்காங்கே விட்டுவிட்டு லேசான சாரல் மழை மட்டுமே இருந்தது. ஆனால், வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலெர்ட்'டை விலக்கிக் கொள்ளவில்லை.
கடந்தாண்டு டிச., 3 முதல் 5ம் தேதி வரை, 'மிக்ஜாம்' புயலின் தாக்கத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பால் பாக்கெட் கூட கிடைக்காமல் திண்டாடினர்.
'தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் மக்கள் தவிப்புக்கு காரணம்' என, மத்திய அமைச்சர்களே குற்றம் சாட்டினர்.
அப்போது, 'வானிலை ஆய்வு மையம் சரியான எச்சரிக்கை தரவில்லை; முறையாக உஷார்படுத்தி இருந்தால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை சிறப்பாக எடுத்திருப்போம்' என, தமிழக அரசு கூறியது.
இந்த முறை மழை இல்லை என்றாலும், 'ரெட் அலர்ட் தொடர்கிறது' என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:
உஷார்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஐந்து இடங்களில் அதி கனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அது அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாக இருப்பதாலும், அதன் நகர்வு வேகம், மேக கூட்டங்களின் அடர்த்தி ஆகியவற்றின் அடிப்படையில் தான், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதால், சென்னை முழுதும், 22 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என்று கருதக் கூடாது. ஏதாவது ஒருசில இடங்களில் மட்டுமே அதி கனமழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும்போது, மக்களும் சம்பந்தப்பட்ட துறையினரும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக தான், இத்தகைய அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் தான், சில இடங்களில் கனமழை ஓய்ந்த நிலையிலும், இந்த அலர்ட் வாபஸ் பெறப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பகல் முழுதும் மழை பெய்யாத நிலையில் நேற்று இரவு ௯:00 மணிக்கு ரெட் அலர்ட் விலக்கி கொண்ட வானிலை மையம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது.
கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்த கணிப்பு அடிப்படையில், 'ரெட் அலர்ட்' உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. காற்றழுத்த தாழ்வு நிலையின் அமைப்பில், காற்றின் தாக்கம் காரணமாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கடலில், நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் மாற்றங்கள் மிக முக்கியமானவை. இதனால், சில இடங்களில் மழை பெய்யாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
- எஸ்.பாலசந்திரன்,
தென்மண்டல தலைவர், வானிலை ஆய்வு மையம்.
பொதுவாக, காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் ஆகியவை, அதிக பரப்பளவு கொண்டதாக இருக்கும். இதன் வெளிச்சுற்று பகுதியில் உள்ள மேக கூட்டங்கள் அடிப்படையில் தான் ஒவ்வொரு பகுதியிலும் மழை பெய்யும். அடர்த்தியான மழை மேகங்கள் உள்ள பகுதி, தெற்கு ஆந்திரா, திருவள்ளூர் மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் சென்றது. இதனால், அந்த பகுதியில் அதிக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யவில்லை.
- பிரதீப் ஜான்
தமிழக வெதர்மேன்.

