கால்டாக்சிகளை கட்டுப்படுத்த விதிமுறை இல்லை: இஷ்டப்படி கட்டண வசூலால் பொதுமக்கள் பாதிப்பு
கால்டாக்சிகளை கட்டுப்படுத்த விதிமுறை இல்லை: இஷ்டப்படி கட்டண வசூலால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : செப் 23, 2024 01:56 AM

சென்னை: தமிழகத்தில், கால்டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படாததால், கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2001ல் கால்டாக்சி இயக்கம் அறிமுகமானது. சென்னையில் துவங்கிய கால்டாக்சி சேவை, படிப்படியாக மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் விரிவடைந்தது.
மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கால்டாக்சி சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பேச்சு
கார்களின் வகைக்கு ஏற்றார் போல, குறைந்தபட்சமாக 4 கி.மீ., துாரத்திற்கு, 200 முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும், கால்டாக்சிக்கான கட்டணம் நிர்ணயம் தொடர்பாக எந்த விதிமுறைகளும் அரசால் வகுக்கப்படவில்லை.
அதனால், பண்டிகை நாட்கள், மழைக்காலம், தொடர் விடுமுறைகளின் போது, பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது.
கால்டாக்சிகளுக்கான கட்டணம் நிர்ணயம், பயணியர் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, கால்டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தினரிடம், 2016ல் தமிழக அரசு பேச்சு நடத்தியது.
அதன்பின், எட்டு ஆண்டுகளாகியும், விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தவில்லை,
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
சென்னை போன்ற பெருநகரங்களில் பயணம் செய்ய, கால்டாக்சி வசதியாக உள்ளது. ஒவ்வொரு நாளும், நேரத்திற்கு ஏற்ற வகையிலும், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையிலும், மாறி மாறி கட்டணம் வசூலிக்கின்றனர்.
எதிர்பார்ப்பு
எந்த அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கின்றனர் என்பதும் தெரியவில்லை. எனவே, கால்டாக்சிகளுக்கான கட்டணம் நிர்ணயம் மற்றும் பயணியர் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக, அரசு விரைவாக விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'கால்டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம், ஜி.பி.எஸ்., கருவி, தனி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு தயாராக உள்ளன. தமிழக அரசு முடிவெடுத்து, விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
வழிகாட்டுகிறது டில்லி
மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம் - 2019ன்படி, மாநிலங்களில் ஓடும் கால்டாக்சிகளுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி மற்றும் மும்பையில், விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
ஆனால், தமிழகத்தில் அரசுடன் பேச்சு நடத்தி, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. இதனால், பயணியரும், ஓட்டுனரும் அவதிப்படுகின்றனர். இந்த தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, கால்டாக்சிகளுக்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
- ஜூட் கேத்யூ
மாநில பொதுச்செயலர்,
தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்கம்.