குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு 'சீட்' கிடையாது: வேட்பாளர் தேர்வில் தி.மு.க., கறார்
குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு 'சீட்' கிடையாது: வேட்பாளர் தேர்வில் தி.மு.க., கறார்
ADDED : பிப் 27, 2026 04:54 AM

சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க., தலைமை. தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்து, வெற்றி வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே, 'சீட்' என்பதில் ஆளுங்கட்சி உறுதியாக உள்ளது.
சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில், தகுதியான வேட்பாளர்களை மட்டும் களமிறக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதற்காக, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பட்டியலில், அதிகமாக இடம்பெற்ற ஆளுங்கட்சியினர் யார் யார் என்ற விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்தவர்கள், நிதியை செலவிடாமல் அலட்சியம் காட்டிய எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலையும் தி.மு.க., தலைமை தயார் செய்துள்ளது. எந்தெந்த எம்.எல்.ஏ.,க்களை மாற்ற வேண்டும் என, உள்ளூர் மக்கள் தெரிவித்த கருத்துகளும் பரிசீலிக்கப்படுகின்றன.
உள்ளூர் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், தொண்டர்களிடமும் நல்ல பெயர் வாங்காமல், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டசபை வருகை பதிவு, தொகுதி பிரச்னைக்காக கேள்விகள் கேட்ட எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிய எம்.எல்.ஏ.,க்களுக்கும், வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து, ஆளுங்கட்சியின் 'சர்வே' நிறுவனம், மேலிடத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களில் 60 பேரின் வெற்றி வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் கீழ் இருப்பதாகவும், அவர்களுக்கு சீட் கொடுப்பது ஆபத்தானது என்றும் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளான தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 60 பேர் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து, சொத்து குவிப்பு, மணல் கடத்தல், சட்டவிரோத குவாரி தொழில் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியவர்களுக்கு, மீண்டும் சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை.
தொகுதியில் வெற்றி வாய்ப்பு இழுபறி என சர்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களில் சிலர், அமைச்சர் அல்லது மாவட்டச் செயலர் பதவி வகித்த போதிலும், அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம். புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

