பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை: பெட்ரோலியத்துறை அமைச்சர் திட்டவட்டம்
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை: பெட்ரோலியத்துறை அமைச்சர் திட்டவட்டம்
ADDED : மார் 13, 2026 04:53 AM

- நமது டில்லி நிருபர் -
''நம் நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை தற்போது இல்லை. பெட்ரோல், டீசல், விமான டர்பைன் எரிபொருள், மண்ணெண்ணெய் கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ''எதிர்க்கட்சிகள் வழக்கம் போல வதந்தி பரப்பி வருகின்றன,'' என, நம் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, பார்லிமென்டில் நேற்று தெரிவித்தார்.
லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று பேசுகையில், ''வளைகுடா போர், நீண்டகால பாதிப்புகளையும் கடும் விளைவுகளையும் ஏற்படுத்தும். ''போர் காரணமாக, கச்சா எண்ணெய் வரும் வழியான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், நம் நாட்டில் எரிசக்தி பாதுகாப்பில் பெரும் சிக்கல் உருவாகப்போகிறது. சிக்கல் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. இதன் வீரியம் போக போக அதிகரிக்கும்,'' என்றார்.
இதற்கு, நம் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, பதில் அளித்து பேசியதாவது: நம் நாட்டின் கச்சா எண்ணெய் வினியோக நிலைமை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. தற்போது எழுந்துள்ள இந்த நெருக்கடிக்கு முன், நமக்கு தேவையான 45 சதவீத அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி, ஹார்முஸ் பாதை வழியாகவே வந்தது. தற்போது அதைவிட கூடுதலான அளவு கச்சா எண்ணெய் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளன.
ஹார்முஸ் அல்லாது, வேறு வழிகளில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2006 - 07 காலகட்டத்தில், 27 நாடுகளில் இருந்து மட்டுமே நாம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தோம். தற்போது, 40 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை தற்போது இல்லை. பெட்ரோல், டீசல், விமான டர்பைன் எரி பொருள், மண்ணெண்ணெய் கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கான வினியோகத் தொடர்கள் எவ்வித சிரமமும் இன்றி வழக்கம்போல செயல்படுகின்றன.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் வழக்கம் போல வதந்திகளை பரப்பி வருகின்றன. இதுபோன்ற நேரத்தில் வதந்திகளை பரப்புவது சரியான செயல் அல்ல. வீடுகள் மற்றும் பண்ணைகளில் காஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் எல்.பி.ஜி., உற்பத்தியானது, 28 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தை விலைகளை விட நுகர்வோர் விலைகள் மிகக் குறைவாகவே உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

