கோயில்களில் முறையாக பராமரிக்கப்படாத பதிவேடுகள்; தீர்வுகாணுமா அறநிலையத்துறை?
கோயில்களில் முறையாக பராமரிக்கப்படாத பதிவேடுகள்; தீர்வுகாணுமா அறநிலையத்துறை?
ADDED : ஆக 29, 2026 05:07 AM

மதுரை: ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பல கோயில்களில் பதிவேடுகள் பராமரிக்கப்படாத நிலையில், கோயில் வருவாய், சொத்துக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இத்துறையின்கீழ் 43,676 கோயில்கள், 45 மடங்கள், 80 கோயில்களுடன் இணைந்த மடங்கள், 2517 அறக்கட்டளைகள், 23 சமண கோயில்கள் உள்ளன. வருவாயை பொறுத்து முதல்நிலை, இரண்டாம் நிலை கோயில்கள் என நிர்வாக வசதிக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோயில்களிலும் அடிப்படை பதிவேடுகளான சொத்து, திட்டம், கட்டளை பதிவேடு போன்றவை பராமரிக்கப்பட வேண்டும்.
ஆனால் பெரும்பாலான கோயில்களில் நீண்ட காலமாக பதிவேடுகள் புதுப்பிக்கப்படாமலும் மறு ஆய்வு செய்யப்படாமலும் உள்ளன. இதுகுறித்து சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். பதிவேடுகள் ஆய்வு செய்யப்படாததால் கோயில் வருவாய், சொத்துக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
அறநிலையத்துறை ஊழியர்கள் கூறியதாவது: இத்துறையின் முதன்மையான பணிகளில் ஒன்றான இவைகளை செய்யாமல் பிற பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக நகை மதிப்பீடு செய்ய மண்டலத்திற்கு ஒரு துணை கமிஷனர் தலைமையில் வல்லுனர் குழு உள்ள நிலையில் பல ஆண்டுகளாக பல கோயில்களின் நகைகள் மறுமதிப்பீடு மற்றும் பின் சேர்க்கை மதிப்பீடு செய்யப்படாமல் உள்ளது. இந்த அலுவலர்களின் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டதா என அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
முக்கியமான களப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், ஆய்வர்கள், அவர்களுக்கான பணியிடங்களில் அல்லாமல் பெரிய கோயில்களில் அயல் பணியில் பணியிடமாற்றப்பட்டுள்ளதால் மேற்படி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளன. பெரிய கோயில்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட செயல் அலுவலர்களை தாய் துறைக்கு திரும்ப பெற்று அறநிலையத்துறையின் செயல்பாட்டை சீர்படுத்த முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
