ADDED : ஆக 03, 2025 03:45 AM

வட மாநிலத்தவர் ஓட்டு, பா.ஜ.,வுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், தமிழகத்தில், வடமாநிலத்தவர் வாக்காளர்களாக சேர்வதால், தி.மு.க., தலைமை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
அதற்காக, வட மாநிலத்தவர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து பேச, அமைச்சர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.
பீஹார் மாநிலத்தில் நடந்து வந்த, 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள, 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த, 36 லட்சம் பேரில், 7 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள், தமிழக வாக்காளர்களாக ஓட்டுரிமை பெறவுள்ளனர்.
வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், சமீப காலமாக பணி நிமித்தமாக தமிழகம் வந்து, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், வேலுார், ராணிப்பேட்டை உட்பட பல தொழில் துறை நிறைந்த மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், வாக்காளர் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், 'பீஹார் மாநிலத்தில் இருந்து, தமிழகம் வந்த, 7 லட்சம் பேருக்கு மேல் வாக்காளர்களாக மாற உள்ளனர்.
அதுபோல பல மாவட்டங்களில், வட மாநிலத்தவர்கள் வாக்காளர்களாக மாறும் நிலையில், அது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' என கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களாகும் வட மாநிலத்தவர், வரும் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளிக்கக்கூடும் என, உளவுத்துறை வாயிலாக ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்தே, அவர்களால் தங்களுக்கு பாதிப்பில்லை என்பது போன்ற தகவலை, அமைச்சர்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியை ஆட்சி தலைமையில் இருப்போர் முடுக்கி விட்டுள்ளனர்.
நேற்று ஈரோட்டில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், முத்துசாமி ஆகியோர் அளித்த பேட்டியில், ''தமிழகத்தில் தி.மு.க., மற்றும் தோழமை கட்சிகள் வலுவாக உள்ளன. தமிழக திட்டங்களால் வட மாநிலத்தவரும் பயன்பெற்று இருப்பதால், அவர்கள் தி.மு.க., கூட்டணிக்குத்தான் ஓட்டளிப்பர்,'' என கூறினர்.
அதேபோல, வேலுார் மாவட்டம், காட்பாடியில் பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
பீஹாரை சேர்ந்தோருக்கு அங்கேயே வேலை கிடைத்திருந்தால், அவர்கள் யாரும் இங்கு வந்திருக்க மாட்டார்கள். அங்கு, வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருப்பவர்களை இல்லை என போட்டு விட்டனர்.
அப்படியெல்லாம் இங்கு செய்ய முடியாது. அதனால், அவர்களை முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்போம். அதனால், தி.மு.க.,வுக்கு பாதிப்பில்லை என்றாலும், அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல, வேறு சில மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பலரும், இதே கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-