ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சியல்ல: செயற்குழுவில் வாசன் ஆவேசம்
ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சியல்ல: செயற்குழுவில் வாசன் ஆவேசம்
ADDED : பிப் 13, 2024 07:12 AM

சென்னை: ''லோக்சபா தேர்தலில், ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சி த.மா.கா., இல்லை,'' என, அக்கட்சியின் தலைவர் வாசன் ஆவேசமாக பேசினார்.
த.மா.கா., செயற்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த வாசனுக்கு, தலைமை நிலைய செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மலர் கொத்துவழங்கினார்.
பொதுச்செயலர் விடியல் சேகர், சக்திவடிவேல், என்.டி.எஸ்.சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் அதிகாரத்தை வாசனுக்கு வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரசவ வலி
கூட்டத்தில் பேசிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், 'அதிக தொகுதிகளை தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.
தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு, அ.தி.மு.க., அல்லது பா.ஜ., கூட்டணியில் இடம் பெற வேண்டும்' என்றுவலியுறுத்தினர்.
பின், வாசன் பேசியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா. ம.க., - த.மா.கா., இணைந்து செயல்பட்டால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில் கூட்டணி என வந்தாலே, நமக்கு பிரசவ வலியாகத் தான் இருக்கிறது. கட்சியின் எதிர்காலம் கருதி முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பா.ஜ., - அ.தி.மு.க.,தலைவர்களிடம் எனக்கு நெருக்கம் உண்டு. அக்கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களும் எனக்கு பழக்கம். அவர்களுக்கும் என் மீது மிகுந்த அன்பு உண்டு.
மற்ற கட்சிகளை போல, ஆட்சியில் த.மா.கா.,வும் பங்கு பெற வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சி த.மா.கா., இல்லை. இவ்வாறு வாசன் பேசினார்.
அவகாசம் உள்ளது
வாசன் அளித்த பேட்டி: கூட்டணி குறித்த முடிவை, வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். ஆளுங்கட்சி கூட்டணி தவிர்த்து, மற்ற கட்சிகள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக, இரண்டு அல்லது மூன்று வாரம் அவகாசம் உள்ளது. இருப்பினும், த.மா.கா.,வின் முடிவை, மூத்த தலைவர்களுடன்ஆலோசனை செய்த பின் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.