எதிரிகளை மட்டுமல்ல; துரோகிகளையும் வீழ்த்த வேண்டும்: அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு
எதிரிகளை மட்டுமல்ல; துரோகிகளையும் வீழ்த்த வேண்டும்: அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு
UPDATED : டிச 11, 2025 07:07 AM
ADDED : டிச 11, 2025 06:40 AM

சென்னை: 'வரும் சட்டசபை தேர்தலில், எதிரியை மட்டுமல்ல, துரோகிகளையும் வீழ்த்த வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் அவர்கள் பேசியதாவது: சி.வி.சண்முகம்: முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு, சங்கு ஊதப்போகும் பொதுக்குழு இது. நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சி கொடுத்தவர் பழனிசாமி. அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என, சிலர் நினைக்கின்றனர். இதில் எதிரி தி.மு.க., மட்டுமல்ல, நம்மோடு உறவாடிக் கொண்டு இருப்பவர்களும் உண்டு. இந்த துரோகிகள், சில அரசியல் புரோக்கர்களிடம், நாம் கவனமாக இருக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வினரின் மன உறுதியை குலைக்க, மிகப்பெரிய சதித்திட்டம் நடக்கிறது. கருத்து கணிப்புகள் எப்போதும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக வந்ததில்லை. அதனால் அதுபற்றி கவலைப்பட வேண்டாம். வேலுமணி கட்சி மாறி செல்கிறார்; சண்முகம் கட்சியை விட்டுப் போகிறார் என வதந்தி பரப்புகின்றனர். உயிர் உள்ளவரை இங்குதான் இருப்போம். இது எங்கள் கட்சி.
கே.பி.முனுசாமி: அ.தி.மு.க.,வின் உண்மையான எதிரி தி.மு.க.,தான். எதிரியை, எதிரியாக மட்டுமே பார்க்க வேண்டும். நண்பனாக பார்த்தால், மக்கள் ஏற்க மாட்டார்கள். மாவட்ட, ஒன்றிய செயலர்கள் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு, கீழே இறங்கி வேலை செய்ய வேண்டும். வரும் தேர்தலில் எதிரிகளை மட்டுமல்ல; துரோகிகளையும் ஒழிக்க வேண்டும்.
எஸ்.பி.வேலுமணி: சிறப்பு வா க்காளர் பட்டியல் திருத்தப் பணியில், தி.மு.க., தில்லுமுல்லு செய்யலாம். தி.மு.க.,வினர் இரண்டு பேர் இருந்தால் கூட, கடைசிவரை வேலை செய்வர். ஆனால், நாம் 50 பேர் இருந்தும், அலட்சியமாக இருப்போம். இனி இப்படி இருக்கக்கூடாது. இனி வரும் நாட்களில் கடுமையாக உழைக்க வேண்டும் .
வளர்மதி: எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிரிகள் இருந்தனர். ஆனால், பழனிசாமிக்கு எதிரிகளும் துரோகிகளும் இருக்கின்றனர். இந்த துரோகிகள் சாக்ரடிசுக்கே விஷம் கொடுத்தவர்கள். எத்தனையோ பேர் காட்டிக் கொடுத்து விட்டு போன போதும், அ.தி.மு.க., அழிந்து விடவில்லை. அ.தி.மு.க., என்ற புலி, வேட்டைக்கு கிளம்பியுள்ளது. அது நேராக கோட்டைக்குதான் செல்லும்.
செம்மலை: பழனிசாமி வளர்ந்து கொண்டு வருவதால்தான், அதிகம் விமர்சிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் அரசியல் எதிரிகளுக்கு, பழனிசாமியை கண்டு பயம் வந்து விட்டது. முதல்வர் ஸ்டாலினை, பழனிசாமி துாங்க விடாமல் செய்து வருகிறார். இவ்வாறு அவர்கள் பேசினர்.

