தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளில் வென்றாலும் வியப்பில்லை: ஸ்டாலின்

தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளில் வென்றாலும் வியப்பில்லை: ஸ்டாலின்

தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளில் வென்றாலும் வியப்பில்லை: ஸ்டாலின்


ADDED : மே 01, 2025 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளில் வென்றாலும் ஆச்சரியம் இல்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், நேற்று மயிலாப்பூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., த.வேலு மகள் திருமண விழாவில் அவர் பேசியது:


மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு, தி.மு.க., வட்ட செயற்குழு உறுப்பினர், பகுதி செயலர் என, படிப்படியாக உயர்ந்து, இப்போது மாவட்டச் செயலராகி உள்ளார். ஏதோ, ஊர்ந்து வந்து, தவழ்ந்து வந்து ஏறவில்லை. படிப்படியாகத்தான் ஏறியிருக்கிறார். ஊர்ந்து, தவழ்ந்து என்று சொல்லும்போது, ஏன் கரவொலி எழுப்பினீர்கள் என்று எனக்கு புரிகிறது. உங்களுக்கும் புரிகிறது.

சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசும்போது, 'ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம், இன்று கம்பீரமாக நம்முடன் நின்று கொண்டிருக்கிறது' என்றேன். இதை அப்படியே விட்டிருந்தால் பிரச்னையே வந்திருக்காது. நான் பேசியது, அப்படியே போய் இருக்கும். வெளியிலும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக் கொண்டனர்.

நான் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எழுந்து, 'ஊர்ந்து வந்து என்ற வார்த்தையை, சட்டசபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றார். அதற்கு நான், 'ஊர்ந்து என்பது பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என போட்டுக்கொள்ளுங்கள்' என்று சொன்னேன்.

ஏற்கனவே, எஸ்.டி.பி.ஐ., மாநாட்டில் பேசிய பழனிசாமி, 'நான் தவழ்ந்து, தவழ்ந்து, படிப்படியாக முதல்வராக வந்திருக்கிறேன்' எனப் பேசி இருக்கிறார். அந்த பேச்சு தற்போது வைரலாகி உள்ளது. நான் முன்பே பார்த்து இருந்தால், சட்டசபையில், அதைக் குறிப்பிட்டு பதில் சொல்லி இருப்பேன்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 200, 220 இடங்களில் வெல்லும் என, இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். அதில் என்ன கஞ்சத்தனம்? 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன் என்றால், செல்லும் இடங்களில் எல்லாம், அந்த வரவேற்பை பார்க்கிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது, நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை, நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியை பார்க்கும்போது, உள்ளபடியே மெய்சிலிர்த்துப் போகிறேன்.

நம்மை எதிர்ப்பவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம். வருமான வரித்துறை, புலனாய்வுத் துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என, எதை வைத்து மிரட்டினாலும் கவலைப்பட மாட்டோம்; அஞ்சவும் மாட்டோம்.

ஒரு நாளும் சர்வாதிகாரத்திற்கு துணைபோக மாட்டோம் என்பதால், 1975ல் நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கருணாநிதி எதிர்த்தார். அப்படி உறுதியோடு இருந்ததால் தான், ஆறு முறை தி.மு.க., ஆட்சி அமைத்தது. ஏழாவது முறையாக தி.மு.க.. ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க இணையதளம்


சென்னையில் நேற்று நடந்த, மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தனது மகளுக்கு அனுஷா என்று வேலு பெயர் வைத்துள்ளார். அது தமிழ்ப்பெயர் அல்ல. ஆனால், மணமக்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு, அழகான தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் பேசும் வீடியோவை, 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்த, நிதன் சிற்றரசு என்பவர், 'குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைக்க சரியான சமூக வலைதளங்கள் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில், வலைதளம் உருவாக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர், அதற்கான பொருள் அடங்கிய இணையப்பக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக துவக்கப்படும்' என, அறிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us