மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக போர்கொடி; காங்கிரஸார் 14 பேர் ஆஜராக 'நோட்டீஸ்'
மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக போர்கொடி; காங்கிரஸார் 14 பேர் ஆஜராக 'நோட்டீஸ்'
UPDATED : ஏப் 03, 2025 03:32 AM
ADDED : ஏப் 02, 2025 07:58 PM

'அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமாரை, பதவியிலிருந்து நீக்க, போர்கொடி துாக்கிய, எதிர் கோஷ்டியை சேர்ந்த 14 பேர், வரும் 16ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு, அக்., 20ம் தேதி, கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் 'கோவை காங்கிரஸ் கட்சியை காப்போம்; காங்கிரசை வளர்ப்போம்' என்ற தலைப்பில் தனிக் கூட்டம் நடத்தப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் பகவதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, மயூரா ஜெயகுமார் தனது உதவியாளர் கருப்பசாமியை நியமித்து, அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கட்சியின் அகில இந்திய செயலருக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றியது கட்சி விதிக்கு எதிரானது. எனவே, எதிர் கோஷ்டியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், மயூரா ஜெயகுமார் புகார் மனு அளித்தார்.
இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி, கட்சி ஒழுங்கு கமிட்டி குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு, கிரிஷ் சோடங்கர் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த எதிர் கோஷ்டியினர் 14 பேரும், கடந்த 31ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்கும், ஒழுங்கு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும்' என, ராமசாமி நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், 14 பேரும் கூட்டத்திற்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து, வரும் 16ம் தேதி நடக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -