கல்வித்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலி: வழக்குகளால் பிரச்னை; கல்வி பணிகள் பாதிப்பு
கல்வித்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலி: வழக்குகளால் பிரச்னை; கல்வி பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 11, 2025 04:51 AM

சென்னை: தமிழகத்தில், ஆறு முதன்மை கல்வி அதிகாரிகள், 20 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் 2,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்ற வழக்குகளால், இப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், கல்விப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, வேலுார், கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இம்மாவட்டங்களில், தொடக்க கல்வி துறையில் பணியாற்றும், மாவட்ட கல்வி அலுவலர்களிடம், முதன்மை கல்வி அதிகாரிகள் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவர்கள் ஏற்கனவே வகித்து வரும், தொடக்க கல்வித் துறையை கவனிக்க முடியாததுடன், முதன்மை கல்வி அதிகாரிக்கான பணியையும் செய்ய முடியாமல் திணறுகின்றனர். ஏனெனில், பொறுப்பு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, மற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அதேநேரத்தில் அவர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற வேண்டி உள்ளதால், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அது புகாராகி, பதவி உயர்வு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலும் முடிவெடுக்க தயங்குகின்றனர்.
இதுபோல, மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நீதிமன்ற வழக்குகளால் இப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், கல்விப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்க முடியாத நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறையில், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக, பல தனி நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவற்றில் சில வழக்குகளில் தீர்ப்பு வந்த பிறகும், அவற்றை அரசு நிறைவேற்றவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்துள்ளன.
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனக்கோரிய வழக்கு, 2023ல் முடித்து வைக்கப்பட்டது. அப்போது, 1,120 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில், தமிழக அரசு தாமதமாக, 'ஏற்கனவே தலைமை ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்ற, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மீண்டும் முதுகலை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்யக்கூடாது.
இனி பதவி உயர்வுக்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், இந்த தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது' என, மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இதனால், 1,000 உயர்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் இல்லாத நிலை நீடிக்கிறது. அத்துடன், பதவி உயர்வுக்கும், 'டெட்' தேர்வு கட்டாயம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பால், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அதேபோல, 20க்கும் மேற்பட்ட கல்வி மாவட்டங்களில், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களாக, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் பள்ளிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பிரச்னைகள் எழும் போது, பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலேயே தீர்க்கப்பட்டிருந்தால், நீதிமன்றம் வரை சென்றிருக்காது. முக்கியமாக, பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்வு தேவையா, இல்லையா என்பது குறித்து அரசுக்கே தெளிவில்லை. முதலில் தேவை என்ற நிலைப்பாட்டிலும், தற்போது தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலும் உள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளை, உடனடியாக முடித்தால் மட்டுமே, வரும் கல்வியாண்டில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் முதல், முதன்மை கல்வி அலுவலர் வரையிலான, காலியிடங்களை நிரப்ப முடியும். இல்லாவிட்டால், 'புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன்' திட்டங்களை, நிர்ணயித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.